2011-09-06 15:03:39

விவிலியத்தேடல் – நல்லவர் துன்புறுவது ஏன்? - திருப்பாடல் 73


செப்.06,2011. நல்லவர் துன்புறுவது ஏன்? கடவுள் நல்லவர் என்றால் அப்பாவிகள் துன்புறுவது ஏன்? இந்தக் கேள்வியை அன்பர்களே, நீங்களும் நானும் ஆயிரத்தெட்டு முறை கேட்டிருப்போம். இதற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கும் எண்ணற்ற ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் கேட்டிருப்போம். இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் கொத்து வெடிகுண்டுகளுக்குப் பலியான போது, ஆப்ரிக்காவின் சொமாலியாவில் ஏழரை இலட்சம் பேர் பசிக்கொடுமையை எதிர்நோக்குவதைப் பார்க்கும் போது....., ஏன் கடந்த சனிக்கிழமைகூட ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 11 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. திருப்பூரில் தொப்புள் கொடிகூட அறுக்காத நிலையில் பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த ஆண் குழந்தை ஒன்று சாக்கடையில் வீசப்பட்டு இறந்து கிடந்துள்ளது. உரோமையில் இஞ்ஞாயிறன்று திறந்தவெளிச் சந்தையில் நடைபாதையில் பைகள் விற்ற ஓர் ஆப்ரிக்க அகதி முகத்தில் எரிச்சல் தரும் பொடிகளை அதிகாரி ஒருவர் தூவினார். அவரது கண் பார்வை என்ன ஆனதோ! எனவே இப்படிப்பட்ட சம்பவங்கள் அடுக்கடுக்காய் நடக்கும் போது, “கடவுளே நீர் நல்லவர் அல்லவா?, அப்படியிருக்க இந்த அப்பாவிகள் துன்புறுவது ஏன்?” என்ற கேள்வி விடை தெரியாத, தொடர் கேள்வியாகவே நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்வையிழந்த கோவை கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கென உரோமைக்கு வந்திருந்தார். அவரை மருத்துவமனையில் பார்க்கச் சென்ற போதேல்லாம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? நான் யாருக்குமே கெடுதி நினைத்ததில்லை. அப்படியிருக்க ஏன் நான் இந்த நாற்பது வயதில் அநியாயமாகக் கண்பார்வையை இழந்து அவதிப்படுகிறேன். நான் இந்தியாவில் சிகிச்சைக்காகச் செல்லாத மருத்துவமனைகள் இல்லை. இலட்சம் இலட்சமாய்ப் பணமும் செலவாகி விட்டது. எனது இந்தத் துன்பம் ஏன்? பதில் சொல்லுங்கள் என்பார். அவரது வீட்டில் ஒருநாள் மாலையில் யாரோ வந்து அழைப்புமணியை அழுத்த இவர் கதவைத் திறக்கச் சென்றிருக்கிறார். இவரது மனைவியும் இவர் பின்னால் சென்றிருக்கிறார். இவர் கதவை இலேசாகத் திறக்கத் தொடங்கியதும் வந்திருந்தவர் இவர் முகத்தில் அமிலத்தை ஊற்றி விட்டு ஓடிவிட்டார். இதனால் முகம் எரிந்து இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. இவரது உடம்பிலும் மனைவியின் உடம்பிலும் காயங்கள். அன்பர்களே, இந்தக் கோவை பேராசிரியர் போன்ற பலர் எழுப்பும் கேள்விகள் இன்று மட்டுமல்ல, விவிலியக் காலத்திலும் கேட்கப்பட்டுள்ளன. திருப்பாடல் 73 ஐ வாசித்துப் பாருங்கள்.
“ஆண்டவரே, பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன். அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை. அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை. வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது. அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன. பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர். இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். 'இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?' என்கின்றார்கள். ஆம். பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர். என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?” ( திருப்பா.73: 3-12 )
“ஆண்டவரே, பொல்லாதவர்கள் வேதனையின்றி வளமுடன் வாழ்கின்றனர். ஆனால் பாவமின்றி வாழும் நான் நாள்தோறும் வதைக்கப்படுகிறேன், காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகிறேன். உம்மைவிட்டால் எனக்கிருப்பவர் யார்” (திருப்பா 73:13-14). கடவுளே, அநீதி செய்வோர் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால் நான் கஷ்டப்படுகிறேன். இந்நிலை ஏன்? இதுதான் இந்தப் பாடல் ஆசிரியரின் பிரச்சனை. நம்மில் பலரின் கேள்வியும் இதுதான். பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த ஒருவர் சொல்கிறார் –
நான் எதிர்நோக்கிய உடல் வேதனைகளும் மனவேதனைகளும் சொல்லும்தரமன்று. எனது உடல் வலிக்கு மாத்திரை சாப்பிடுவேன். அது குறைந்து விடும். ஆனால் எனது மனவலிக்கு, எனது உணர்வுகளின் வலிக்கு எந்த மாத்திரைகளைச் சாப்பிடுவது? அதற்கு மருந்து கிடையாது. அந்நேரத்தில் அந்த கடவுளைக் கேள்வி கேட்காமல் இருப்பது மிகவும் கடினம். கடவுளே, நான் இவ்வாறு துன்புற நீர் அனுமதிப்பது ஏன்? இந்த வேதனை அகல நான் என்ன செய்ய வேண்டும்? இந்த வேதனைகள் மூலம் கடவுளே நீர் எனக்குக் காட்ட விரும்புவது என்ன? நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லும், செய்கிறேன் என்றேன். ஆனால் கடவுளின் பதில் மௌனமாகவே இருந்தது. நீதிமான் யோபு சொத்து சுகத்தை இழந்து எல்லாராலும் ஒதுக்கப்பட்டு குப்பையில் கிடந்த போதுகூட அவரது சொல் எதற்கும் கடவுள் பதில் சொல்லவில்லை (யோபு33:12). ஆனால் பின்னர் நானாகவே ஒரு பதிலையும் கண்டுபிடித்தேன். “எனக்குத் தெரியாது” என்பதே அந்தப் பதில். எனது பிள்ளைகளும் நான் கடவுளிடம் கேட்ட கேள்விகளையே என்னிடம் கேட்டார்கள். அவர்களிடமும் நான் சொன்னது இதே பதில்தான். “எனக்குத் தெரியாது”. பரவாயில்லை. நான் எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. என்னை இந்த நிலையில் வைத்து இவ்வளவு வேதனைகளைக் கொடுப்பதற்குக் கடவுளுக்கு ஏதோ காரணம் இருக்கின்றது. எனவே என்னாலும் இத்துன்பத்தோடு வாழ முடியும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்தத் துன்பங்களில் அனைத்தையும் கடந்த ஒரு சக்தி என்னை வழி நடத்துகிறது என்பதை மட்டும் உணருகிறேன். அதனைக் கடவுளது திருவருள் என்பேன். யோபு என்ற நீதிமான் அனுபவிக்காத துன்பமா?, யோபு என்ன சொன்னார்...
கடவுள் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும், அவர்மீது நம்பிக்கை வைப்பேன் (யோபு 13,15)
யோபு போன்று நானும் கடவுள் மீது பற்றுறுதி வைக்கிறேன். கடைசியில் யோபுவை இரட்டிப்பாக ஆசீர்வதித்த அதே கடவுள் என்னையும் வழிநடத்துவார்.
அன்பு நெஞ்சங்களே, நமது வாழ்க்கையில் விசுவாசம் ஆழமாக வேரூன்றும் போது “கடவுளே இத்துன்பம் ஏன்?” என்ற கேள்வியை நிறுத்தி விடுவோம். அதற்கு மாறாக கடவுளே, நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கத் தொடங்குவோம். ஆனால் தீமை செய்வோரின் வாழ்வு உடனடியாகத் தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்றது. மகிழ்ச்சியாகத் தோன்றும் தீயோரின் வாழ்வு நிரந்தரமானது அல்ல, அது விரைவில் அழியக்கூடியது. இன்றைய நாட்களில் சில கோடீஸ்வரர்கள் நிலைமை தெரிகின்றதுதானே. இதைத்தான் 73ம் பாடல் ஆசிரியர் ஆசாப் செபிக்கிறார்.....
“ஆண்டவரே, அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்! விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்.....”
அதேசமயம், “கடவுளின் அண்மையே நலமெனக் கொண்டு, ஆண்டவரை அடைக்கலமாய்க் கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைத்து...” கடவுளை எல்லா வேளைகளிலும் உறுதியாகப் பற்றி வாழும் நல்லவரது வாழ்க்கை நீடூழி வாழும். இந்த மாறாத உண்மையை நாம் அறிந்து உணர்ந்து வாழ்வதற்கு உதவி செய்யக்கூடியவர் கடவுள் ஒருவர் மட்டுமே. நமது மனித அறிவால் முடியாது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வளவு கொடும் துன்பத்திலும் விசுவாசத்தை மட்டும் இழக்கவில்லை என்று ஒரு நேர்காணலில் நாம் கேட்டோம். இம்மாதிரியான விசுவாசத்தை அருள்பவர் கடவுளே. நமது இந்தக் கேள்விக்கானப் பதிலை உருக்கமான செபத்திலே பெற முடியும்.
அதேநேரம் அப்பாவிகள் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு நாம் எல்லாரும் முயற்சிக்க வேண்டும். தவறான ஆட்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு அனுமதியாமல் இருந்திருக்கலாம். பின்லேடன்களையும் இராஜபக்ஷாக்களையும் உருவாக்காமல் இருந்திருக்கலாம். நாம் வாழும் பகுதியில் குற்றக்கும்பல்கள் உருவாகாமல் தடுத்திருக்கலாம். துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் உற்பத்தி செய்யப்படுவதை நிறுத்தியிருக்கலாம். விபச்சார விடுதிகளை இல்லாமல் ஆக்கியிருந்தால் எண்ணற்ற இளம் சிறுமிகளும் பெண்களும் பாலியல் வன்செயலுக்குப் பலியாகுவதைத் தடுத்திருக்கலாம். நம்மிடையே பகிர்தல் இருந்தால் மாசற்றவர்களின் பசிச்சாவுகளைக் குறைக்கலாம். இப்படி நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டுக் கடவுளை நொந்து கொள்வதில் பயன் இல்லை.
எனவே பல நிகழ்வுகள் மூலம் நம்மிடம் பேசும் கடவுள், நம் வாழ்க்கையில் மௌனம் காப்பதாய் உணரும் போது நமது விசுவாசத்தைத் தளரவிடக் கூடாது. எதையும் எப்போதும் ஆண்டவன் தரும் பிரசாதமாக ஏற்கப் பழகிக் கொண்டுவிட்ட ஒருவருக்கு துயரம் என்பதே கிடையாது.
ஒரு பெரியவர் இரயிலில் பயணம் செய்தார். அந்த இரயிலில் பிச்சை எடுத்த அந்தச் சிறுவன், அவரிடம் போய் ஐயா.. எனக்குப் பெரிய கஷ்டம்னு ஆரம்பிச்சான். அதற்கு அந்தப் பெரியவர், இந்தாப்பா, உன்னுடைய பெரிய கஷ்டத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்காதே. அதனாலே உன்னுடைய நேரமும் என்னுடைய நேரமும் வீணாய்ப் போகும். நான் என்ன செய்ய என்று மட்டும் சொல் என்றார். ஒரு ரூபாய் கொடுங்க என்றான். அவரும் கொடுத்தார். அவர் இப்படி கொடுத்ததால் அவன் இரண்டு தடவைகள் வெவ்வேறு வேடத்தில் வந்து பிச்சை கேட்டான். அவரும் இரண்டு ரூபாய், பின் மூன்று ரூபாய் என்று ஒவ்வொரு தடவையும் போட்டார். இவனுக்கு ஆச்சரியம். அவன் கேட்டான், பெரியவரே என்னை அடையாளம் தெரியாமல் தருகிறீர்களோ, நானேதான் அவன் என்றான். அதற்குப் பெரியவர், எனக்கு உன்னைத் தெரிகிறது. உனக்குத்தான் உன்னைத் தெரியவில்லை என்று நினைத்தேன் என்றார். அவன் உடனே அவரிடம், இந்தாங்க நீங்க கொடுத்த ரூபாய்கள் என்றான். அதைப் பெரியவர் திரும்பப் பெற மறுத்தார். அவனும் இந்தப் பணம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். பெரியவர் அவனிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “என்னை நம்புகிற ஒரு மனிதரை நான் ஏமாற்றக்கூடாது” என்றான்.
அன்பர்களே, நம்மை நம்பும் கடவுள் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை ஏமாற்றுவது நியாயமா?









All the contents on this site are copyrighted ©.