2011-09-06 14:09:49

விசுவாசத்தின் மகிழ்ச்சிநிறை வசந்த காலத்தில் கியூப மக்கள் வாழ்ந்து வருவதாக அறிவித்துள்ளார் கர்தினால் ஹைமே ஒர்த்தெகா


செப் 06, 2011. கியூபா நாட்டில் நல்ல மாற்றங்கள் இடம்பெறத் துவங்கி, விசுவாசத்தின் மகிழ்ச்சிநிறை வசந்த காலத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டின் ஹவானா பேராயர் கர்தினால் ஹைமே ஒர்த்தேகா.
அச்சம், முரண்பாடு, மோதல் என்பவைகளெல்லாம் கடந்த காலத்திற்கு உரியவைகளாக மாறி, மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையோடு நெருங்கி வருவதைக் காண முடிகின்றது என்றார் கர்தினால் ஒர்த்தேகா.
பிறரன்பின் கன்னிமரி என்ற பெயரில் கியூபாவின் பாதுகாவலியாகச் சிறப்பிக்கப்படும் அன்னை மரியின் திரு உருவச்சிலை அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்டதன் 400ம் ஆண்டு 2012ல் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, ஓராண்டாக அத்திரு உருவச்சிலை நாட்டின் அனைத்து நகர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருவது பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் ஒர்த்தேகா, இத்திருப்பயணம், நாட்டில் பேச்சுவார்த்தையையும் ஒப்புரவையும் வளர்க்கும் ஒரு தருணத்தை வழங்கியுள்ளதாகவும், அனைத்து கியூப மக்களும் நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒன்றிணைந்து உழைக்குமாறும் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.