2011-09-06 14:10:42

இறை அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குமாறு வியட்நாம் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி


செப் 06, 2011. எத்தனைத் துன்பங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும், கடந்தவைகளை மறந்து, இறை அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குமாறு வியட்நாம் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி.
திருப்பீடத்திற்கும் வியட்நாமிற்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்க உழைப்பதும், தலத்திருச்சபைக்கும் திருப்பீடத்திற்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்தி பாலமாகச் செயல்படுவதும், தன் முக்கிய பணி என்ற பேராயர் ஜிரெல்லி, வியட்நாம் கத்தோலிக்கர்கள் ஏனையோருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன், தலத்திருச்சபைக்கான பணியில் தங்களுக்குள்ளேயே ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
வியட்நாமிற்குள்ளேயே தங்கிப் பணியாற்றுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள போதிலும், அத்தகைய அனுமதி விரைவில் கிட்டும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் ஜிரெல்லி.
கத்தோலிக்க மதத்தின் மீது சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள வியட்நாமில் அந்நாட்டு கத்தோலிக்கத் துறவியர் 1140 பேர், அந்நாட்டுப் பங்குத் தளங்களிலும், எயிட்ஸ் நோயாளிகளிடையேயும், ஏழைகள் மற்றும் வீடற்றோரிடையேயும் சிறப்புப் பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.