செப் 05, 2011. பொது நலனை மேம்படுத்தும் சமூகப்பணிகளில் ஈடுபட்ட 15 கத்தோலிக்க இளைஞர்களை
வியட்நாம் அரசு கைது செய்துள்ளது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு செபத்திற்கு
விண்ணப்பித்துள்ளனர் அவ்விளைஞர்களின் பெற்றோர். சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்த இந்த
15 இளைஞர்களும் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 10,000
தடுப்புக்காவல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக வியட்நாம் அரசுத்தலைவர் அறிவித்துள்ள வேளையில்
கத்தோலிக்க இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டு வருவது கவலை தருவதாக உள்ளதாக வியட்நாம் கத்தோலிக்கர்கள்
அறிவித்துள்ளனர். 15 கத்தோலிக்க இளைஞர்கள் வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டுள்ள
நிலையில், 6 பேரே தலைநகர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 9 பேர் குறித்த விவரங்கள்
எதுவும் தெரியவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வியட்நாமின் மனித உரிமை அமைப்பின்
கூற்றுப்படி, அந்நாட்டில் அரசியல் கைதிகள் மற்றும் மனச்சான்றின் கைதிகள் எனக் குறைந்தபட்சம்
258 பேர் சிறையில் உள்ளனர்.