2011-09-05 13:41:56

வாரம் ஓர் அலசல் - வருங்காலத் தலைமுறைச் சிற்பிகள் - நல்லாசிரியர்கள்


செப்.05, 2011. ஒரு சமயம் கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றார். அந்த ஆற்றங்கரையில் மாணவர்களை நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா? எனப் பார்த்து வருகிறேன் என்றார். அவர் அதற்குத் தயார் செய்து கொண்டிருந்த சமயம், ஒரு மாணவர் தண்ணீரில் நீந்திச் செல்வதைக் கண்டார். மறுகரைவரைச் சென்று திரும்பிய அந்த மாணவர், “குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றைக் கடக்கலாம்” என்றார். அப்போது அரிஸ்ட்டாட்டில் அந்த மாணவனிடம், “உன்னைச் சுழல்கள் எடுத்துச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்” என்றார். அதற்கு அந்த மாணவன், “இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஓர் அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப் போவோம்” என்றான்.
அன்பு நெஞ்சங்களே, இந்த அரிதான ஆசிரியப் பெருமக்களின் அருமையை உலகத்துக்கு வெளிப்படுத்தும் நோக்கில் 1994ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 5ம் தேதி “உலக ஆசிரியர் தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயினும் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாட்களில் இத்தினத்தைச் சிறப்பித்து வருகின்றது. இந்தியாவும் இந்த “ஆசிரியர் தினத்தை” சர்வபள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியன்று கொண்டாடி மகிழ்கின்றது. தமிழ்நாட்டில் பிறந்து ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராகத் திகழ்ந்த இவர், இந்தியக் குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகும் மாணவர்களின் நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட இந்த ஆசிரியர் தினத்திற்கு நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “ஆசிரியர் பணி என்பது, தகவல்களைச் சொல்லிக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாது. நல்ல அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதுதான் அப்பணி. தரமான கல்வி என்பது, ஆசிரியர்களின் தரத்தைப் பொருத்துதான் அமையும். ஒவ்வோர் ஆசிரியரும் முழு மூச்சுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்” என்று தமிழக முதல்வர் தனது செய்தியில் கூறியுள்ளார். இந்த நல்ல நாளில் வத்திக்கான் வானொலியும், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கு, சிறப்பாக அதன் நேயர் குடும்பத்திலுள்ள நல் ஆசிரியர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
ஒரு சமூகம், மிக உயரிய நிலையை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். அதேசமயம் அது தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கானப் பணியைச் சரிவரச் செய்யவில்லை என அர்த்தம் என்று சொல்லலாம். இன்று ஒவ்வொருவரும் ஒரு நிலைக்கு வந்துள்ளதற்கு ஆசிரியர்களின் பங்கும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆசிரியர் என்றாலே ஒருவிதமான பயம், கசப்பு, வெறுப்புப் போன்றவைகளும் ஏற்படுவதுண்டு. புனிதமான இந்த ஆசிரியர் தொழிலுக்கே களங்கம் ஏற்படுத்தும் சில ஆசிரியர்கள் பற்றி ஒவ்வொரு நாளும் தினத்தாள்களில் வாசிக்கிறோம். தனது வகுப்பு மாணவிகளையே பாலியல் பலாத்காரம் செய்வது, மாணவர்களைக் கோபத்தில் அடிப்பது, அதனால் மாணவர் இறப்பது, படுகாயமடைவது, கண்பார்வையையும் செவிப்புலனையும் இழப்பது போன்ற செய்திகளை வாசிக்கிறோம். கடந்த வாரத்தில்கூட உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர், தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்து ஆபத்தான நிலையில், மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக வாசித்தோம். இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் இவர்கள் மூவரும் உயிர்வேதியியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை ஆசிரியர், ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், அதனால் மனம் வருந்திய அவர்கள், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962ம் ஆண்டு மே 12ம் நாள் பொறுப்பேற்ற பேராசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மாணவர்களிடையே இனிமையான, அன்பான ஆசிரியராக இருந்தார். மாணவர்கள் அவரிடம் அன்போடு நெருங்கிப் பழகினர். பக்தியோடு அணுகினர். மாணவர்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுகித் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம் என்கிற அளவுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டவர். இதனைக் கண்ட சக ஆசிரியர்கள்கூட இவரிடம் வந்து தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். டாக்டர் இராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து கொல்கத்தாவிற்குப் பணிமாற்றமடைந்து செல்லும் போது இவரின் மாணவர்கள் கூட்டமாக வந்து மலர்மாலைகளை அணிவித்தனர். வேறு சில மாணவர்கள் வண்டியில் பூட்டியிருந்த குதிரையை ஓட்டிவிட்டு அவரை வண்டியில் ஏற்றித் தாங்களே வண்டியை இழுத்துச் சென்றனர். இப்படிச் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லப்பட்டும் மாணவர்கள் கேட்கவில்லை. அதேநேரம், இப்படிச் செய்ததை தங்களுக்குக் கிடைத்தப் பெரும் பேறாகவே மாணவர்கள் கருதினர். டாக்டர் இராதாகிருஷ்ணன் மீது அவரது மாணவர்களுக்கு அவ்வளவு தூரம் குருபக்தி இருந்தது. அந்த அளவுக்கு அவரும் நல்ல குருவாக இருந்தார். இதனால்தானே எழுத்தறிவித்தவன் இறைவன் என்றனர். மாதா பிதா குரு, தெய்வம் என்றனர்.
இத்தகைய நல்ல ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும், தீராத அன்புள்ளம் கொண்டிருப்பவர் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான டாக்டர் ஆ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam). "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்று உலகினரால் புகழப்படும் இவர், “இள நெஞ்சில் எழுச்சி தீபமே ஆசிரியர் இலட்சியம்!” எனச் சொல்லியிருப்பவர். எதிர்கால இந்தியா இன்றைய மாணவர்களை நம்பி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத இவர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி பாடமாகவும் திகழ வேண்டும் என்ற ஆழ்ந்த கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சிற்பி சும்மா, சிற்பியாக மட்டுமே வாழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கில் சிற்பங்களை மட்டுமே உருவாக்கி இருப்பார். ஆனால் அந்தச் சிற்பியான ஆசிரியர், குணநலன் கொண்டு அக்கலையை மற்றவர்களுக்குக் கற்பித்தால் ஆயிரக்கணக்கான சிற்பிகளை உருவாக்கி அதன் மூலம் இலட்சக்கணக்கான சிற்பங்களைச் செதுக்கி இருக்க முடியும். அதுவே ஆசிரியர் பணி என்றவர் டாக்டர் அப்துல்கலாம். இவர் தனது பள்ளி அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.
நான் படித்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஓரிரண்டு மிகச்சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். 1936ம் ஆண்டு இராமேஸ்வரம் பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஆசிரியர் முத்து அய்யர் என் மீது தனி ஆர்வம் செலுத்துவார். அதற்கு காரணம் வகுப்பில் கொடுக்கப்படும் பயிற்சிகளை நான் சிறப்பாகச் செய்வேன். பின்னாளில் முத்து அய்யரைப் பற்றி என் தந்தை கூறிய போது, என்னை உருவாக்கியதும் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்ததும் அவர்தான் என்பது தெரியவந்தது. 1954-57ம் ஆண்டில் நான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.,) ஏரோநாட்டிக்கல் பிரிவில் படித்துக் கொண்டிருந்த போது, சிறியவகைத் தாக்குதல் விமானத்தை வடிவமைக்கும் திட்டம் எனக்கு வழங்கப்பட்டது. ஒரு குழுவினராக இணைந்து நாங்கள் செயல்பட்டு வடிவமைப்பை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். என்னுடைய திட்டத்தைப் பார்த்து தெளிவில்லாமல் இருப்பதாகவும் அதனால் அவர் ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார். வெவ்வேறு குழு உறுப்பினர்களிடமிருந்து நான் தகவல்களைப் பெற்று ஒன்றிணைக்க முடியாததால் அதைச் செய்து முடிக்க அவரிடம் நான் ஒரு மாதம் அவகாசம் கேட்டேன். இவற்றையெல்லாம் அவர் காது கொடுத்து கேட்கவேயில்லை. இன்று வெள்ளிக்கிழமை. திங்கள்கிழமை காலைவரை நான் மூன்று நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் விமான வடிவமைப்பை முடிக்கவில்லை என்றால் படிப்புக்கான உதவித்தொகை ‘நிறுத்தப்பட்டுவிடும்’ என்று கடுமையாகக் கூறிவிட்டார். இவ்வாறு அவர் சொன்னது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில் அந்த உதவித்தொகையை நம்பித்தான் என் படிப்பு இருந்தது. என் குழுவினர் இரவு பகலாக உழைத்தால்தான் முடிக்க முடியும் என்பதை உணர்ந்தார்கள். நாங்கள் அன்று இரவு தூங்கவே இல்லை. சாப்பிடவும் இல்லை. சனிக்கிழமை ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்தோம். ஞாயிற்றுக்கிழமை காலையில் நாங்கள் ஏறத்தாழ வடிவமைப்பை முடிக்கும் நிலையில் இருந்தோம். ஆய்வுக்கூடத்தில் யாரோ நிற்பது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தால் அவர் பேராசிரியர் சீனிவாசன். ‘உங்களை நிர்ப்பந்தம் செய்து, காலக்கெடு நிர்ணயித்ததால்தான் இப்போது சிறந்த வடிவமைப்பு கிடைத்துள்ளது’ என்று எங்களை பாராட்டினார். ஏதாவது நெருக்கடி அளிக்கும் பட்சத்தில்தான் நமது சிந்தனை செயல்படத் துவங்குகிறது. திறமையை உருவாக்க இது ஒரு யுக்தி என்பதை நான் அப்போது அறிந்தேன். எனவே மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதையே ஆசிரியர்கள் தங்கள் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.
பத்மா பூஷன் (1981), பத்மா விபூஷன் (1990), பாரத் ரத்னா (1997) உட்பட பல விருதுகளைப் பெற்ற தமிழர் அப்துல் கலாம், தான் செல்லும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு ஏழு அம்ச உறுதிமொழியைப் பிரமாணம் செய்து வைக்கிறார் எனவும் கேள்விப்பட்டோம், வாசித்தோம். அவற்றில் ஒன்றிரண்டை இந்த ஆசிரியர் தின நாளில் நினைவுபடுத்துகிறோம்.
எல்லாவற்றுக்கும் முதலாவதாக நான் சொல்லிக் கொடுப்பதை விரும்புகிறேன். கற்பித்தல்தான் என் ஆன்மா.
மாணவர்களை செம்மைப்படுத்துவது மட்டுமே என் பொறுப்புகளாக கருதாமல் எதிர்காலத்தின் ஆற்றல் வளமாக கருதப்படும் இளம் உள்ளங்களை எழுச்சி பெற செய்வதும் பொறுப்பு என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆசிரியர் தொழிலின் இலட்சியத்துக்கு பொறுப்புள்ளவனாக நடந்து கொள்வேன்.
சிறப்பான பயிற்சி மூலம் சராசரி மாணவரைக் கூட மிகச்சிறப்பாக படிக்கும் மாணவராக மாற்றும் மிகச்சிறந்த ஆசிரியராக என்னை நான் கருதிக் கொள்வேன்.
என்னுடைய வாழ்க்கையே மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் நான் நடந்து காட்டுவேன்.
என்னுடைய மாணவர்களை நான் கேள்வி கேட்க ஊக்கப்படுத்துவேன். அதன் மூலம்தான் ஆராய்ச்சி மனப்பாங்கு அவர்களிடம் வளரும் என்பதையும் அறிவார்ந்த குடிமக்களாக அவர்கள் உருவாவார்கள் என்பதையும் நான் அறிவேன்.
எல்லா மாணவர்களையும் நான் சமமாக நடத்துவேன், மதம், ஜாதி, மொழி அடிப்படையில் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன்.
நான் தொடர்ச்சியாக திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம்தான் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
என் மாணவர்களது வெற்றியை நான் அகம் மகிழ்ந்து கொண்டாடுவேன்.
நான் ஆசிரியராக இருப்பதை உணர்கிறேன். தேசிய வளர்ச்சியில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்கிறேன் 4. மாணவர்களுடன் எனது நடவடிக்கைகள் அனைத்தும் தாய், சகோதரி, தந்தை, சகோதரனுக்குரிய அன்பு மற்றும் அக்கறையிலேயே அமையும்.
நல்ல சிந்தனைகளால் என் மனதை நிரப்புவேன். நல்லதையே செய்வேன், நல்வழியிலேயே நடப்பேன்.
அன்பர்களே, சீனாவின் உயரிய இலக்கிய விருதைப் பெற்றுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்தியப் பேராசிரியர் பி.ஆர். தீபக் அவர்களுக்கு இந்த நல்ல ஆசிரியர்தின நாளில் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். நம் ஒவ்வொருவருக்கும் கல்விக்கண்களைத் திறந்த ஆசிரியப் பெருமக்களை இந்நாளில் நினைத்துப் பெருமைப்படுவோம். முன்னாள் பேராசிரியரான திருத்தந்தை 16ம் பெனடிக்டும், உண்மையையும், உறுதியான நன்னெறி மற்றும் ஆன்மீக விழுமியங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்குமாறு இந்த செப்டம்பர் மாதத்தில் செபிக்குமாறு கேட்டுள்ளார். நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களை நல்ல குடிமக்களாக்கும் கடமையைக் கொண்டுள்ள ஆசிரியர் சமுதாயத்திற்காகச் செபிப்போம். வருங்காலத் தலைமுறைகளைச் செதுக்கும் இந்த ஆசிரியர் சிற்பிகளை நினைத்து நன்றி சொல்வோம்.
நம் ஆசிரியர்களை நன்றியோடு நினைக்கும் நாட்கள் எல்லாமே நமக்கு ஆசிரியர் தினம்தான்..!








All the contents on this site are copyrighted ©.