2011-09-05 14:30:19

திருத்தந்தையின் மூவேளை செப உரை


செப் 05, 2011. சகோதரத்துவ உணர்வுடன் கூடிய திருத்தங்களில் ஈடுபடுவதுடன் ஒன்றிணைந்து செபிப்பது நம் இலக்கணமாக இருக்கட்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களையொட்டி நண்பகல் மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய திருத்தந்தை, பிறரைத் திருத்தும்போது சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவது என்பது, இதயத்தில் எளிமையையும் தாழ்ச்சியையும் எதிர்பார்க்கிறது என்றார். ஒன்றிணைந்தக் குடும்பமாகச் செபிப்பது அதற்கு மேலும் உதவும் எனவும் கூறினார் பாப்பிறை.
சகோதரத்துவ அன்பு என்பது இருபக்கத்துப் பொறுப்புணர்வுடன் இணைந்து வருகிறது என்பதால், நம் சகோதரன் நமக்கு எதிராகக் குற்றமிழைக்கும்போது சகோதரனுடன் தனியாகப் பேச முயல வேண்டும் என்றார். தனக்குச் செவிமடுக்காத சகோதரனிடம் எவ்விதம் அன்பு கொண்டு திருத்த முயல வேண்டும் என இயேசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
தனிப்பட்ட முறையில் செபிப்பது முக்கியத்துவம் நிறைந்தது எனினும், குழுவாக இணைந்து செபிப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.