2011-09-05 13:41:42

செப். 06 வாழ்ந்தவர் வழியில்..... ஜேன் ஆடம்ஸ்


அமைதி விரும்பி, மெய்யியலாளர், சமூகவியலாளர், எழுத்தாளர், பெண்ணுரிமை ஆதரவாளர் போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜேன் ஆடம்ஸ் (Jane Addams). 1860ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி பிறந்த ஜேன் ஆடம்ஸ், டைம் பத்திரிக்கை வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். குழந்தைகளின் தேவைகள், பொதுநலவாழ்வு உள்ளிட்ட தாய்மார் குறித்த விவகாரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு கவனம் செலுத்த மிகவும் உதவியவர் இவர். பெண்கள் தங்கள் சமூகங்களைத் தூய்மைப்படுத்துவதில் சிறப்புக் கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்றும் இந்தச் சமூகம் வாழ்வதற்குச் சிறந்ததொரு இடமாக அதனை மாற்றுவதற்குப் பெண்களால் முடியும் என்றும் வலியுறுத்தியவர். 1915ல் முதல் உலகப் போர் தொடங்கிய ஓராண்டுக்குப் பின்னர் பெண்கள் அமைதிக் கட்சியில் ஈடுபட்டார். அக்கட்சியின் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1917ல், அமெரிக்க ஐக்கிய நாடு உலகப் போரில் ஈடுபட்ட போது அதனை வன்மையாக எதிர்த்தவர் ஜேன் ஆடம்ஸ். இவர் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜேன் ஆடம்ஸின் அமைதிக்கான இம்முயற்சிகளே அவருக்கு 1931ல் நொபெல் அமைதி விருதைப் பெற்றுத் தந்தது. இந்த விருதைப் பெற்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற பெருமைக்கும் உரியவரானார்.








All the contents on this site are copyrighted ©.