2011-09-05 13:39:38

செப்.05 வாழ்ந்தவர் வழியில்..... வ. உ. சிதம்பரம்பிள்ளை


1872 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊருக்கு அருகில் வன்தனம் என்கிற சிறு கிராமத்தில் பிறந்தவர் வ. உ. சிதம்பரம்பிள்ளை. கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இவர் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல். வழக்கறிஞரான இவர், உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச்சங்கம், இளையோர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால்தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார். தமிழர் வரலாற்றில், இராசேந்திரச்சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என அழைக்கப்படுகிறார். ஆனால் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர். சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர். எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார். அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் சமுதாயத்தையும் மீட்டெடுக்க தன்னை முழுவதும் இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 1936ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் இறந்தார்.
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்". 1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.








All the contents on this site are copyrighted ©.