2011-09-05 14:32:38

அயர்லாந்து அரசின் அறிக்கைக்கு திருப்பீடத்தின் பதில்மொழி


செப் 05, 2011. அயர்லாந்து குருக்கள் மீதானப் பாலினக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் வேண்டி அந்நாட்டு அரசு திருப்பீடத்திற்கு அனுப்பிய அறிக்கைக்குத் திருப்பீடம் தெளிவான விளக்கங்களுடன் பதில்மொழி வழங்கியுள்ளதாக திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
அயர்லாந்து அரசால் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் திருப்பீடம் ஆழ்ந்த மற்றும் மரியாதையுடன் கூடியஅக்கறையை வெளிப்படுத்தி விளக்கம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, சிறார்களையும் இளையோரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை முதன்மை குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திருப்பீடத்தின் இந்தப் பதில்மொழி அறிக்கை, அயர்லாந்து அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
அயர்லாந்து குருக்கள் மீதான பாலினக் குற்றச்சாட்டுகளில் திருப்பீடம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அயர்லாந்து அரசு, தன் 'குளோய்ன் அறிக்கை'யில் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை காலை தன் பதில்மொழிகள் அடங்கிய அறிக்கையை திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகத்தில் சமர்ப்பித்தது திருப்பீடம் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.