2011-09-03 15:06:14

புதிய நற்செய்திப்பணிக்கு கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் சேர்ந்து உழைக்கத் திருத்தந்தை அழைப்பு


செப்.03, 2011. பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் நற்செய்தியை மீண்டும் அறிவிப்பதற்கு கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிரேக்க நகரமான தெசலோனிக்கேயில் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் வல்லுனர்கள் நடத்திய நான்கு நாள் கூட்டத்தின் நிறைவுக்குக் கடிதம் அனுப்பிய திருத்தந்தை, “நவீன உலகில் திருச்சபையின் சாட்சியம்” என்ற தலைப்பிலான இவர்களின் விவாதங்கள் காலத்திற்கேற்றவை என்று பாராட்டியுள்ளார்.
முதல் நூற்றாண்டில் தெசலோனிக்கே நகரத்திற்கு நற்செய்தியை எடுத்துச் சென்ற புனித பவுல், கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவருக்கும் இடையே புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்தி கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வழி அமைப்பாராக என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை.
உரோம் அந்தோணியானம் பிரான்சிஸ்கன் பாப்பிறை நிறுவனமும் தெசலோனிக்கே அரிஸ்ட்டாட்டில் பல்கலைக்கழகமும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.








All the contents on this site are copyrighted ©.