செப்.03, 2011. இந்தியாவில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் சென்னையில்தான் மிகவும்
மோசமான நிலையில் இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சிஏஐ – ஆசியா என்ற “ஆசிய
நகரங்களில் தூய்மையான காற்றுக்கான முன்னெடுப்பு” என்ற அமைப்பு, இந்தியாவின் முக்கிய ஆறு
நகரங்களில் எடுத்த ஆய்வில் சென்னை கடைசியாக வந்திருப்பதாகத் தெரிகிறது. புனே, ராஜ்கோட்,
புவனேஸ்வரம், இந்தூர், சூரத், சென்னை ஆகிய ஆறு நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கள
ஆய்வு, பாதசாரிகளின் நேரடிக் கருத்து மற்றும் அரசின் போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை
ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. "இந்திய நகரங்களை விரைந்து
மேம்படுத்த வேண்டியது நகரமைப்புத் திட்டமிடல்களில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்"
என்ற பரிந்துரையையும் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது. பாதசாரிகளுக்கான வசதிகளைச் செய்து
கொடுப்பதில் 100-க்கு 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது
என்று அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதி பார்தா பாஸு கூறினார். சென்னை, 40 மதிப்பெண்களை
மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையங்களில்
பாதசாரிகளுக்கான வசதிகளைப் பொருத்தவரை 6 நகரங்களிலுமே மோசமான நிலைதான் காணப்படுவதாக ஆய்வு
தெரிவிக்கிறது.