2011-09-01 15:55:44

பிலிப்பின்ஸ் நாட்டில் 1,000,000 செபமாலைகள் செபிக்கும் திட்டம்


செப்.01,2011. செபங்கள் இல்லாமல் உலக அமைதியைப் பெறுவது மிகக் கடினம் என்று பிலிப்பின்ஸ் நாட்டு பேராயர் Socrates Villegas கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் குடும்ப செபமாலை அணி என்ற கத்தோலிக்க அமைப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் 200 நாட்கள் பத்து இலட்சம் செபமாலைகள் செபிக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 7ம் தேதி, செபமாலை அன்னையின் திருநாளன்று ஆரம்பமாகும் இந்த முயற்சி அடுத்த 200 நாட்கள் தொடர்ந்து, 2012ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி, அனைத்து நாடுகளின் தாயான கன்னி மரியின் திருநாளன்று முடிவடையும் என்று இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செபமாலை முயற்சிகளில் பத்து லட்சம் பிலிப்பின்ஸ் நாட்டினர் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஓர் உச்சகட்டமாக 11.11.11, அதாவது 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி காலை 11 மணிக்கு பிலிப்பின்ஸில் உள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர் இணைந்து 1,000,100 செபமாலைகள் செபிக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Nereo Odchimar இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டி, செபங்கள் மூலம் இவ்வுலகிற்கு அமைதியை கொணர முடியும் என்று வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.