2011-09-01 15:55:25

கோவாவிலிருந்து பாகிஸ்தான் சென்று குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்


செப்.01,2011. கோவாவிலிருந்து பாகிஸ்தான் சென்று குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படும் இந்தியக் கடவுச்சீட்டுக்காலம் நீட்டிக்கப்படும் என்றும், ஒரு சிலருக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
1510ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை கோவா போர்த்துகல் நாட்டின் ஒரு காலனியாக இருந்தது. அந்த ஆண்டுகளில் கோவாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வேலைகள் தேடிச்சென்ற கத்தோலிக்கர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை கோவாவில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது மட்டும் பாகிஸ்தானில் குடியேறியுள்ள கோவா கத்தோலிக்கர்கள் இந்திய பயணத்தை மேற்கொள்ள அனுமதி அளித்து வந்த இந்திய அரசு, தற்போது விதித்துள்ள புதிய ஆணைகளை பாகிஸ்தானில் வாழும் கோவா கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் குடியேறிய இந்துக்கள், மற்றும் சீக்கியர்கள் அந்நாட்டில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமையை இதுவரை வழங்கிவந்த இந்திய அரசு, தற்போது கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரையும் பாகிஸ்தானின் சிறுபான்மையினர் என்று அங்கீகரித்துள்ளதால் இந்த மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தச் சட்ட மாற்றம் ஆகஸ்ட் 11 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தபோதிலும், ஊடகங்களுக்கு இந்த சட்ட மாற்றம் இப்புதனன்று வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.