2011-09-01 15:56:33

குழந்தைகளின் இறப்பு வீதம் குறித்த ஆய்வு


செப்.01,2011. உலக அளவில், பிறந்த 4 வாரத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் அதன் பங்களிப்பு அதிகமாகவே இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவி்க்கிறது.
உலக நலவாழ்வு நிறுவனம், மற்றும் சேவ் த சில்ரன் (Save the Children) உள்ளிட்ட அமைப்புக்கள் இணைந்து, 193 நாடுகளில், கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பிறந்து 4 வாரத்தில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை கடந்த 1990ல், 46 லட்சமாக இருந்தது. 2009ல் அது 33 லட்சமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2000மாவது ஆண்டுக்குப் பிறகு, அந்த இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
பிறந்த குழந்தைகள் இறப்பதில் 99 விழுக்காடு, வளரும் நாடுகளில்தான் ஏற்படுகிறது. இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில்தான் அது அதிகமாக உள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 9 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், அது உலக விழுக்காட்டில் 28 சதமாக உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
ஆப்ரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, இறப்பு விகிதம் குறைப்பு ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில், மிகவும் மந்தமான வளர்ச்சியையே காண்பதாக உள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 39 குழந்தைகள் இறப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 15 நாடுகளில், 12 நாடுகள் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவை.
பிரசவத்தின் போது ஏற்படும் கோளாறுகள், நிமோனியா உள்ளிட்ட தோற்றுநோய்கள் போன்ற காரணங்களால் இந்த இறப்புக்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த இறப்புக்களைத் தடுக்க, குறைந்த செலவிலான மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும், அதில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஃப்ளாவியா பஸ்டெரோ தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.