2011-08-31 13:44:51

செப். 01, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, செம்பை வைத்தியநாத பாகவதர்


பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் 1895ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி பிறந்தார், பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் தம் கிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் எல்லாரும் இசைப் பாடகர்களாகத் திகழ்ந்ததால், பாகவதருக்கு கர்நாடக இசை, பாரம்பரியமான கலையாக விளங்கியது.
3ம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8ம் வயதில் தமது அரங்கேற்றக் கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். ஏறத்தாழ 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.
மிகக் கம்பீரமாகப் பாடும் ஆற்றலைப் பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடையச் செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜய-விஜயன், இயேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கர்நாடக இசையில் இவரின் சீடர்கள். 1974ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி செம்பை வைத்தியநாத பாகவதர் இறைபதம் சேர்ந்தார். இவரின் மறைவிற்கு பிறகு இவரின் பெயரில் பல இசை விழாக்கள் நடைபெறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.