2011-08-30 15:50:12

விவிலியத்தேடல் – ஆண்டவரே, நீதித் தலைவர்களைத் தாரும் - திருப்பாடல் 72


ஆக.30,2011. RealAudioMP3 மலைப்பாம்பு ஒன்று, முயல் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. தான் செய்வது தகாத செயல் என்று ஒருநாள் உணர்ந்த பாம்பு, முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி அதனை முயலிடம் அறிவித்தது. “முயலே, நான் இனிமேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன்அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்குக் கொடுக்கிறேன்” என்றது. இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாகப் பயன்படுத்துமா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டு, முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா எனக் காத்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து, “நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?” என்று கேட்டது. அதற்கு முயல், ”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு” என்று அமைதியாகப் பதில் சொன்னது. பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் அந்தப் பாம்பு, “இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்” என்று தனக்குத்தானே நியாயம் சொல்லிக் கொண்டது.

இது, ‘எல்லாம் சட்டப்படிதான்’என்னும் சீனப் பழங்கதையாகும். எல்லாம் சட்டப்படித்தான் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டு அநீதிகள் அரங்கேறுவதை உலக நாடுகளில் பரவலாக நம்மால் பார்க்க முடிகின்றது. தலைவர்களின் அநீதி அட்டூழியங்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் பொறுமையிழக்கும் அப்பாவி பொது மக்களும் வன்முறைப் போராட்டங்களில் இறங்கி விடுகிறார்கள். லிபியாவில் இப்போது நடப்பது இதுதான். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற தேதி வெளியானதிலிருந்து நீதி கேட்டு உலகத் தமிழர் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. “நீதி தன்னை தூக்கில் போட, தமிழர்களே! நீதி கேளுங்கள்” என்ற வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. பேரறிவாளனின் தாய் அற்புதம்மாவோ, “நான் கேட்பது உயிர்ப் பிச்சை அல்ல! மறுக்கப்பட்ட நீதி! சட்டம் எங்கள் பக்க நியாயத்தை, கருத்தைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதே” என்று குமுறுகிறார். இந்த மூன்று பேரைத் தூக்கிலிட சென்னை உயர்நீதிமன்றமும் இப்போது எட்டு வாரம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

“சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்பதைப் போன்று நீதிபதிகளின் பதவி, கறைபடியாத மனிதர்களும் விலைபோகாத மனிதர்களும் அலங்கரிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சௌமித்ர சென் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். ஆக, நீதி அரசர்களாலே, நீதி அவமதிக்கப்படுகிறது. நீதி அரசனே நீதி தவறும்போது குடிமக்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது? ஒரு நாட்டில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தங்களது தலைவர் தங்களை நீதியோடு ஆட்சி செய்ய வேண்டும், ஏழை எளியோரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும், எல்லாரும் அமைதியுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்றுதானே விரும்புகின்றனர். குறிப்பாக, தேர்தல் சமயங்களில் இத்தகைய நல்ல தலைவர்களைத் தருமாறு கடவுளிடமும் செபிக்கின்றனர். மன்னரின் இயல்பை எடுத்தியம்பிய மோசிகீரனாரும் தனது புறநானூற்றுப் பாடலில், “நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று பாடினாரே. ஒருவரது உடலுக்கு உயிரைத் தருவது நெல்லும் நீருமாக இருக்கலாம். ஆனால் உலகில் மலரும் மக்களுக்கு மன்னன்தான் உயிர். ஆம். “குடி உயரத்தானே கோன் உயரும்”.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களும் தங்களது அரசர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் தங்களை வழிநடத்த வேண்டும், வறியோருக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று கடவுளிடம் செபித்தனர். அவர்களின் செபத்தைத் திருப்பாடல் 72ல் காண்கிறோம்.

“கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்!.......”

இஸ்ரயேல் மக்கள், அரசரின் முடிசூட்டு விழாவின் போது அல்லது புத்தாண்டு விழாவின் போது அல்லது ஒவ்வோர் அரசரின் ஆண்டு விழாவின் போது இத்திருப்பாடல் 72 ஐ பாடியிருக்கலாம் என்று சொல்கின்றனர். இந்த மக்கள் அவ்வளவு தூரம் நீதிக்காகப் பசி தாகம் கொண்டிருந்தனர். இவர்கள் நீதிக்காக ஏங்கியதற்கானக் காரணங்களை வேதபுத்தகத்தில் வாசிக்கிறோம். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்குரைத்த கி.மு.8ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இஸ்ரயேல் நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே, ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர். ஆமோஸ் நூல், பிரிவு 8 ல்....

“வறியோரை நசுக்கி நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம். கள்ளத்தராசினால் மோசடி செய்யலாம்…..”

என்று வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்மையும் நிறைந்த சமுதாயத்தைச் சீறுகிறார். எனவே இவ்வளவு கொடுமைகளை அனுபவித்த இஸ்ரயேல் மக்கள், தங்களது அரசர்....

“பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக! அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக!”

என்று செபித்தனர். மேலும், இவ்வாறு தங்களை ஆளும் அரசர்களின் ஆட்சி....

“ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் எனப் பரந்து விரிந்து கிடக்கட்டும். மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும். குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! ஆண்டவராகிய கடவுள், போற்றி! போற்றி!”

என்று கடவுளை வாழ்த்துகின்றனர். முறைசெய்து காப்பாற்றும் மன்னவனை மக்கள் இறையென்றே வாழ்த்துவார்கள். நல்ல தலைவர்கள் இப்படித்தான் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலுமே இத்தகைய தலைவர்களுக்கு எடுத்துக் காட்டுக்களைச் சொல்லலாம். இந்தியாவின் கடைசி கவர்னல் ஜெனரல், வங்கத்தின் ஆளுனர், தமிழக முதல்வர் என்று பல பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர் ராஜாஜி. இவர் மேற்கு வங்கத்தில் கவர்னர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற போது 12 கண்ணாடி அலமாரிகள் செய்து தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களையும் அவற்றில் வைத்து ஒப்படைத்தவர். தந்தத்தாலான கைத்தடியையாவது எடுத்துச் செல்ல வேண்டுமென மூதறிஞரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் சிறிதும் வளைந்து கொடுக்கவில்லை ராஜாஜி. அது இன்றும் கொல்கத்தா ராஜ்பவனில், ராஜாஜியின் அரசியல் நேர்மைக்கு அழகிய சாட்சியாக இருக்கிறது. இத்தகைய நாட்டை ஆளும் தலைவர்கள், நெறிதவறா வாழ்க்கையை தவம் போல் ஏற்று வாழும் நல்ல தலைவர்கள், உருவாகச் செபிப்போம்.

ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே உண்மையான நீதியாகும். இராணுவத்திலா, பொருளாதாரத்திலா, அரசியல் அமைப்பிலா, மொழியிலா என எல்லாவற்றிலும் நம்பர் 1 என்று பெருமைப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டில்தான் கைதிகள் அதிகம். அவ்வெண்ணிக்கை சுமார் 23 இலட்சம். ஒரு நாட்டுத் தலைவர் தனது ஆட்சியை நினைத்துப் பெருமைப்படுவது இலவசங்களை அள்ளி வீசுவதில் அல்ல, மாறாக நாட்டில் அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு நீதி கிடைக்கிறதா?, மக்கள் பசியில்லாமல் தூங்கச் செல்கிறார்களா? சாதிமதபேதமின்றி அனைவரும் அமைதியுடன் வாழ்கிறார்களா?, குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? இவை போன்றவைதான் ஒரு நல்ல ஆட்சியை எடை போடுபவை. எனவே இக்காலத்திற்குத் தேவைப்படும், தனக்காக, தனது உறவுகளுக்காகச் சொத்து சேர்க்காத, மக்கள் நலனை மையப்படுத்தி நீதியுடன் ஆட்சி செய்யும் தலைவர்களை ஆட்சியில் அமரவைப்போம். தமிழ் இலக்கிய மரபிலே இறைவனுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டது. எனவே அரசின் நல்ல திட்டங்களை ஆண்டவனின் திட்டங்களாக நினைத்து அவற்றைச் செயல்படுத்த குடிமக்களும் முன்வர வேண்டும். நீதியுடனும் நேர்மையுடனும் ஆளும் நல்ல தலைவர்கள் கோட்டையில் அமரச் செபிப்போம்.

“கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! ஏழைகளின் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பாராக!....”








All the contents on this site are copyrighted ©.