2011-08-30 14:50:54

காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஆகஸ்ட் 30, 2011. இந்தியாவில் 40 விழுக்காட்டினருக்கு காசநோய்க்கிருமித் தொற்று உள்ள நிலையில், ஆண்டுதோறும் புதிதாக 20 இலட்சம் பேருக்கு காசநோய்க்கிருமித் தொற்று ஏற்படுவதாகவும், 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் எனவும், உலக சுகாதார மையப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஊட்டச் சத்துக் குறைவு, பொது சுகாதாரக் குறைவு ஆகியவை காச நோய் அதிகரிக்க காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 144 காச நோய்ச் சிகிச்சை மையங்களும், 791 பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு, மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நோயாளிகள்,ஆறு மாதங்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்த, தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகையத் திட்டத்தை இருபது ஆண்டுகளாக அமல்படுத்தியும், காச நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 ஆயிரம் பேருக்கு நோய்த் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. மற்ற சுகாதாரத் திட்டங்களோடு ஒப்பிடும்போது, காச நோய்க்கான "டாட்ஸ்' சிகிச்சை திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்ற போதிலும், நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.