2011-08-30 14:50:03

உலகில் மதக்கட்டுப்பாடுகளின் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது


ஆகஸ்ட் 30, 2011. 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட 3ஆண்டுகளில் உலகில் மதக்கட்டுப்பாடுகளின் அளவு குறிப்பிடத்தகும் வகையில் அதிகரித்திருந்ததாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலகின் 198 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்த மூன்றாண்டுகளில் 23 நாடுகளில் மதத்தின் மீதானக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருந்ததாகவும், 12 நாடுகளில் குறைந்து காணப்பட்டதாகவும், ஏனைய நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லையெனவும் தெரியவந்துள்ளது. மதக்கட்டுப்பாடுகளை அனுபவிக்கும் நாடுகள், அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளே என்பதால், உலகின் 220 கோடி மக்களுக்கு மேல் மதக்கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்வதாக 'மதமும் பொது வாழ்வும்' குறித்த PEW ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டு வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, 101 நாடுகளில் அரசு தரப்பிலிருந்து ஏதாவது ஒரு வகையிலான மத விரோத நடவடிக்கை இடம்பெற்றதாகவும் 142 நாடுகளில் சில குழுக்களின் மத விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
மதக் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள 14 நாடுகளுள் ஆறு, மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 130 நாடுகளில் கிறிஸ்தவர்களும், 117 நாடுகளில் இஸ்லாமியர்களும் மதம் சார்ந்த பிரச்னைகளை எதிர்நோக்குவதாகவும் இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.