2011-08-29 15:43:01

துருக்கியில் மத சிறுபான்மையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்க முடிவு


ஆக.29,2011. துருக்கியில் 1936ம் ஆண்டு மத சிறுபான்மையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை இஸ்லாம் அல்லாத ஒரு மத அறக்கட்டளையின் மேற்பார்வையில் ஒப்படைப்பதற்கு துருக்கியின் பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இஞ்ஞாயிறு இரவு சிறுபான்மை மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் துருக்கியின் பிரதமர் இப்தார் விருந்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன் தன் முடிவை அறிவித்தார்.
இந்த முடிவினால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், ஆர்மீனியர்கள், மற்றும் யூதர்கள் பயன் பெறுவர் என்றும், சிறுபான்மை மதத்தவர் என்ற குழுவில் உரோமன் கத்தோலிக்கர்கள் அதிகாரப்பூர்வமாய் சேர்க்கப்படவில்லை என்றும் ஆசிய செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறியது.
பிரதமர் அறிவித்துள்ள இந்த முடிவின்படி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு 1000 சொத்துக்களும், ஆர்மீனியர்களுக்கு 100 சொத்துக்களும் கல்தேயக் கத்தோலிக்கர் மற்றும் யூதர்களுக்கு பல சொத்துக்களும் திரும்பத் தரப்படும்.
பிரதமரின் இந்த செயல்பாடு சிறுபான்மை மதத் தலைவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதென்றும் உரோமன் கத்தோலிக்க சொத்துக்களும் விரைவில் திரும்ப அளிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக இத்தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.