லிபியாவில் கத்தோலிக்கருக்குத் தொடர்ந்து சுதந்திரம் கிடைக்கும், கத்தோலிக்கர் நம்பிக்கை
ஆக.27,2011. லிபியாவில் கடாஃபி அரசு வீழ்ந்துள்ளது போல் தெரியும் இவ்வேளையில் இந்த ஆப்ரிக்க
நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை சுதந்திரமாகத் தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையைத்
தெரிவித்துள்ளனர் லிபியக் கத்தோலிக்கத் தலைவர்கள். கடாஃபி அரசில் கத்தோலிக்கர் சுதந்திரமாக
வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறும் அத்தலைவர்கள், லிபியாவில் தற்சமயம்,
அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் புரட்சிப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
சுதந்திரமாகச் செல்ல முடிகின்றது என்று கூறினர். லிபியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை
தெரிவித்த டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி, தற்சமயம்
நாட்டின் உயர்ந்தோர் குழுமம், நிலைமையைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து எதிர்காலம்
பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார். லிபியாவில் 25 அருட்பணியாளர்கள்
உள்ளனர். சுமார் 60 அருட்சகோதரிகள் மருத்துவமனைகளில் பணிசெய்கின்றனர். மேலும், தற்போது
டிரிப்போலி நகரில் பெரும்பாலான மக்கள் தண்ணீர், மின்சாரம், சுகாதார வசதிகள் இன்றி கடும்
மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.