2011-08-27 16:07:34

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 அமெரிக்காவில் கறுப்பின மக்களின் தலைசிறந்தத் தலைவராக விளங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் 30 அடி உயரச்சிலை ஒன்று ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று வாஷிங்டனில் திறக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த செவ்வாய் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் தற்போது அங்கு வீசப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புயல் ஆகியவை காரணமாக, இந்தச் சிலைத் திறப்புவிழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஞாயிறு வாஷிங்கடனில் வீசப்போகும் புயல் வரலாற்றில் சொல்லப்படும் அளவு மிக சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். வரலாற்றில் சொல்லப்படும் அளவு சக்திவாய்ந்த புயல் இவ்வாண்டு ஆகஸ்ட் 28 மட்டுமல்ல, 48 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறையும் வாஷிங்கடனில் வீசியுள்ளது. இப்போது வீசும் புயலுக்கு ஐரீன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு முன் வீசிய புயலை உருவாக்கியவர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். இந்தப் புயலை உருவாக்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரையும், அவர் வழங்கிய உரையையும் இன்றைய நமது ஞாயிறு சிந்தனையின் மையமாக நாம் சிந்திப்போம்.

இருபதாம் நூற்றாண்டு முடியப் போகிறது என்று உணர்ந்த நாம், அந்த நூற்றாண்டை பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்தோம். அந்த நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான, மற்றும் அவலமான நிகழ்வுகளை பல கோணங்களில் சிந்தித்தோம். இருபதாம் நூற்றாண்டைப் பற்றி பல்வேறு ஆய்வுகள், கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள Wisconsin-Madison மற்றும் Texas A&M என்ற இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர். 20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த சொற்பொழிவுகளைக் குறித்து அவர்கள் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தினர். அந்தக் கணிப்பின் இறுதியில், "I have a dream" அதாவது, "எனக்கொரு கனவு உண்டு" என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் வழங்கிய ஓர் உரை தலை சிறந்த உரை என்று கணிக்கப்பட்டது. அந்த உரையைப் பற்றி இன்று நாம் நினைத்துப் பார்க்க காரணம்?... இந்த உரை 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வழங்கப்பட்டது. அந்த உரையை வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரைப் பற்றி இன்று சிந்திக்கவும் ஒரு காரணம் உண்டு. அதுதான் இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு திருவழிபாட்டின் வாசகங்கள். இன்றைய வாசகங்கள் இறைவாக்கினரைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கும் வாசகங்கள். மார்ட்டின் லூத்தர் கிங் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இறைவாக்கினர் என்பதை மறுக்க முடியாது.
48 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 28ம் நாள் அமெரிக்காவின் தலை நகரான வாஷிங்டனில், ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபத்தின் முகப்பில் நின்றபடி 36 வயது நிரம்பிய இளம் கிறிஸ்தவ போதகர் மார்ட்டின் லூத்தர் கிங் 17 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் வாஷிங்டனில் அன்று வழங்கிய உரை ஒரு மறையுரை அல்ல. அது ஓர் அரசியல் உரை. இருந்தாலும், "எனக்கொரு கனவுண்டு" என்று அவர் முழங்கிய அந்த அரசியல் உரையை ஒரு மறையுரையைப் போல மக்கள் கேட்டு, ஆமென், ஆமென் என்று அடிக்கடி சொல்வதை வீடியோப் பதிவுகளில் நாம் காண முடிகிறது.

இதோ, அவ்வுரையின் ஒரு சில வரிகள்....
எனக்கொரு கனவுண்டு... இந்த நாடு தனது அடிப்படை உறுதிப்பிரமாணத்தை நடைமுறைப்படுத்தும் என்ற கனவு எனக்குண்டு. "எல்லா மனிதரும் சமம் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்த நாடு சொல்லும் அந்த உறுதிப்பிரமாணம் உண்மையாகும் என்ற கனவு எனக்குண்டு.
எனக்கொரு கனவுண்டு... எனது நான்கு பிள்ளைகளும் வாழப்போகும் இந்த நாட்டில், அவர்களது குணத்தையும் அறிவுத்திறனையும் பார்த்து அவர்கள் மதிக்கப்படுவார்களே தவிர, அவர்களது தோல் நிறத்தை வைத்து அல்ல என்ற கனவு எனக்குண்டு.
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும், கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவுண்டு...

இறைவாக்கினர்கள் எசாயா, ஆமோஸ் ஆகியோர் கண்ட கனவுகளைத் தன் கனவுடன் இணைத்து, மார்ட்டின் லூத்தர் கிங் வழங்கிய அந்த உரையை அங்கு கூடியிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரமாய் ஆமோதித்து வரவேற்றனர். வார்த்தைகளில் சொல்ல முடியாமல் அவர்கள் உள்ளத்தில் புதைந்திருந்த பல கனவுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுத்த மார்ட்டின் கனவைத் தங்கள் கனவாக நன்றியோடு ஏற்றுக் கொண்டனர். மார்ட்டின் வழங்கிய இந்த உரையை அடுத்து, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வேண்டும் என்ற போராட்டம் உச்ச நிலையை அடைந்தது. மார்ட்டின் வழங்கிய இந்த உரை வானொலியிலும், தொலைக்காட்சியிலும், Youtube போன்ற கணணி வழித்தொடர்பிலும் கடந்த 48 ஆண்டளவாய் பல கோடி மக்களை அடைந்துள்ளது. அவர்கள் மனதை சமத்துவ சமுதாயம் நோக்கி நடத்திச் சென்றுள்ளது. 1963ம் ஆண்டு மார்ட்டின் கண்ட கனவு, 2009ம் ஆண்டு கறுப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமாவை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசுத்தலைவராக அமர வைத்துள்ளது.
ஆனால், மார்ட்டின் வழங்கிய இந்த உரை எல்லா மக்களையும் மகிழ்விக்கவில்லை. இந்த உரையைக் கேட்ட பல ஆயிரம் பேர் தூக்கத்தை, நிம்மதியை இழந்தனர். சமத்துவக் கனவை மக்கள் மனதில் விதைத்த மார்ட்டின் தொடர்ந்து வாழ்ந்தால், வெள்ளையினத்தவரே மேலானவர்கள் என்று எண்ணி வந்த தங்கள் கொள்கைகளுக்குப் பெரும் ஆபத்து என்று அவர்கள் நினைத்தனர். 36ம் வயதில் கறுப்பின மக்களிடையே நம்பிக்கையை வளர்த்த மார்ட்டின், 37வது வயதில் உலக அமைதிக்கான நொபெல் பரிசைப் பெற்றார். ஈராண்டுகள் சென்று, அவரது 39வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைவாக்கினர் எவரும் நிம்மதியாக, உலகப் பார்வையில் வெற்றி பெற்றவர்களாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது.

தன் உரைகளால் மட்டுமல்ல, தன் வாழ்வாலும் ஓர் இறைவாக்கினராக இருந்தவர் மார்ட்டின் லூத்தர் கிங். மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், வெள்ளை இனத்தவருக்கு எதிராக மேற்கொண்ட சமஉரிமை போராட்டத்தில் காந்தியைப் போல அகிம்சை வழிகளையே கடைபிடித்தார். இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல என்பதையும், எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காக உயிர் தியாகம் உட்பட பல தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் மார்ட்டின் உணர்ந்திருந்தார். "ஒரு கொள்கைக்காக இறக்கத் துணியாதவன் வாழவே தகுதியற்றவன்" என்பது மார்ட்டின் சொன்ன புகழ்பெற்ற ஒரு கூற்று.
நெருப்பில் குதிப்பது எளிது. எதோ ஒரு வேகத்தில் குதித்து விடலாம். ஆனால், தொடர்ந்து நெருப்பில் நடந்து, அல்லது, அந்த நெருப்புடன் போராடி அதை வெல்வது மிகவும் கடினம். இறைவாக்கினர்கள் பலர் இந்தப் போராட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொல்லும் பணியை இறைவன் அவர்களுக்கு அளித்தார். பழைய ஏற்பாட்டுக் காலமானாலும், புதிய ஏற்பாட்டுக் காலமானாலும், நாம் வாழும் இன்றையக் காலமானாலும் சரி... சமுதாயம் சரியில்லை என்றும், அதைச் சரி செய்ய என்னென்ன செய்யவேண்டும் என்றும் இறைவாக்கினர் கூறும் உண்மைகள் அடிமைப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தை நம்பிக்கையில் நிறைத்தன. அதே நேரம், இறைவாக்கினர்கள் சொன்னது ஆளும் வர்க்கத்தை, அதிகாரத்தில் இருந்தோரை அச்சுறுத்தியது, ஆட்டிப் படைத்தது.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும் வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம் எரேமியா பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் இப்படி நாம் கேட்கிறோம்.
இறைவாக்கினர் எரேமியா 20: 7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும் உமது வார்த்தைகள் என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவைப் போல பல கோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.

அநீதியைக் கண்டும் காணாமல் வாழும் தன் காலத்தைப் பற்றி மார்ட்டின் லூத்தர் கிங் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன:
“History will have to record that the greatest tragedy of this period of social transition was not the strident clamor of the bad people, but the appalling silence of the good people.”
“நாம் வாழும் காலத்தின் மிகப்பெரும் வேதனை என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலரது கூப்பாடு அல்ல... நல்லவர்களின் அதிர்ச்சியூட்டும் அமைதியே பெரும் வேதனை தரும் காரியம்.” இன்றும் இந்த வார்த்தைகள் பொருள் உள்ளவைகளாக, போருத்தமானவைகளாகத் தெரிகின்றன.
மனதுக்குச் சங்கடமான உண்மைகள் சொல்லப்படும்போது, உண்மையைச் சந்திக்க மறுத்து, நாம் ஓடி ஒளியலாம். அல்லது, அந்த உண்மையைச் சொன்னதால், உயிர் துறக்கலாம். இதையே இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார்.
தற்போது இந்தியாவில் பல கசப்பான உண்மைகளை வெளிக்கொணர, அன்னா ஹசாரே தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பல கோணங்கள் வெளிப்பட்டாலும், அரசியல்களைக் கடந்து, இந்திய நாட்டிற்கு, பாமர, ஏழை மனிதர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கனவு காணும், அந்தக் கனவை நனவாக்க உண்மைகளை எடுத்துக் கூறும் இறைவாக்கினர்கள் நம் மத்தியில் இன்னும் பெருக வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.