2011-08-27 16:07:01

ஆகஸ்ட் 28, வாழ்ந்தவர் வழியில்... புனித அகஸ்டின்


"இவ்வுலகம் ஒரு புத்தகம். இவ்வுலகில் பயணங்கள் மேற்கொள்ளாதவர்கள் இப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டும் படித்தவர்கள்." இதைச் சொன்னவர் புனித அகஸ்டின்.
காலத்தால் அழியாத 'கடவுளின் நகரம்' (City of God) போன்ற சிறந்த பல நூல்களை எழுதிய அகஸ்டின் 354ம் ஆண்டு ஆப்ரிக்காவில் பிறந்தார். இளம் பருவத்தில் ஐரோப்பாவின் பல நகரங்களில் கல்வி பயின்ற இவர், உலக இன்பங்களில் மூழ்கி, கடவுள், மதம் ஆகியவற்றை விட்டு அதிகம் விலகி வாழ்ந்தார். இவரது தாய் மோனிகா இவரது மனமாற்றத்திற்காக இடைவிடாது செபித்ததன் பயனாக, அந்தத் தாய் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அகஸ்டின் மனம் மாறி, திருமுழுக்கு பெற்றார்.
மீண்டும் ஆப்ரிக்கா திரும்பிய அகஸ்டின், தன் பூர்வீகச் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். ஹிப்போ (Hippo) நகரின் ஆயராக 395ம் ஆண்டிலிருந்து, 430ம் ஆண்டு வரை பணி செய்தார். ஆயராக இருந்தபோது, பல அரிய நூல்களை எழுதினார். தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் ஒளிவுமறைவின்றி தொகுத்து ‘Confessions’ என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது.
அகஸ்டின் 430ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் நாள் இறையடி சேர்ந்தார். இவரது திருநாள் ஆகஸ்ட் 28 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அதற்கு முந்திய நாள், ஆகஸ்ட் 27 அன்று அகஸ்டினின் தாய் புனித மோனிகாவின் திருநாள் கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.