2011-08-27 16:03:30

அபுஜாவில் ஐ.நா. கட்டிடம் தாக்கப்பட்டதற்குத் திருத்தந்தை வருத்தம்


ஆக.27,2011. அபுஜாவில் ஐக்கிய நாடுகள் நிறுவனக் கட்டிடம் தாக்கப்பட்டதற்குத் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்திகளை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரிய அரசுத்தலைவர் குட்லக் ஜோனத்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் ஆகிய இருவருக்கும் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இத்தந்திச் செய்திகளை அனுப்பியுள்ளார்.
மரணத்தையும் வன்முறையையும் தேடுவோர் அவற்றைக் கைவிட்டு வாழ்வைப் பாதுகாப்பதையும் மதிப்புமிக்க உரையாடலையும் கைக்கொள்ளுமாறு அச்செய்திகளில் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை.
அத்துடன், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கானத் திருத்தந்தையின் செபமும் ஆறுதலும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நைஜீரியாவின் அபுஜாவிலுள்ள 26 மனிதாபிமான மற்றும் வளர்ச்சித் திட்ட ஐ.நா. அலுவலகங்கள் இருக்கும் கட்டிடம் இவ்வெள்ளி காலை 11 மணியளவில் தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உள்ளானது. அனைத்துப் பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ஐ.நா.பணியாளர்கள் சுமார் 20 பேர் இறந்தனர், 68 பேர் காயமடைந்தனர் மற்றும் 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாக, இச்சனிக்கிழமையிலிருந்து மூன்று நாள்களுக்கு ஐ.நா.கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.