2011-08-26 14:39:32

குடியுரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன்றைய உலகில் 1 கோடியே 20 இலட்சம் – ஐ.நா. அறிக்கை


ஆக.26,2011. எந்த நாட்டிலும் சேர்க்கப்படாதவர்களாய், குடியுரிமை மறுக்கப்பட்டவர்களாய் இன்றைய உலகில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்வதாக ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோருக்கான தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
வீடு, கல்வி, உடல் நலம், என்பன போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்து, முகாம்களிலும், கூடாரங்களிலும் வாழ்ந்து வரும் இம்மக்கள் உலகில் மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. உயர் அதிகாரி Antonio Guterres கூறினார்.
குடியுரிமையற்றோரின் எண்ணிக்கையை உலகில் குறைக்கும் நோக்கத்தோடு, 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ஐ.நா.வினால் நடத்தப்பட்ட ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் 50ம் ஆண்டு நிறைவு நெருங்கி வரும் வேளையில், இப்பிரச்சனைக்கு நாம் இன்னும் தகுந்த தீர்வு காணவில்லை என்பதை இன்றைய உலக நிலை நமக்குச் சொல்கிறது என்று Guterres எடுத்துரைத்தார்.
1990களில் சோவியத் ஒன்றியம், யுகோஸ்லாவியா, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் பிரிக்கப்பட்டபோது பல்லாயிரம் மக்கள் குடியுரிமை இழந்தனர்.
இதேபோல் கடந்த பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளதால், குடியுரிமை இழந்தோரின் எண்ணிக்கை கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் பல மடங்காகப் பெருகியுள்ளதென்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளோரில் பலர், சமுதாயத்தின் வலுவற்ற நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட இனத்தவராகவும், பழங்குடி இனத்தவராகவும் இருக்கின்றனர் என்றும் இச்செய்தி மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.