2011-08-25 14:54:03

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டம் குறித்து இந்திய ஆயர்கள் கருத்து


ஆக.25,2011. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேயின் உடல் நலம் குன்றியிருப்பதாகக் கூறப்படும் இவ்வேளையில், இதைக் குறித்து இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள இப்போராட்டம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் Gracias, இந்தியத் திருச்சபை அன்னா ஹசாரேயின் நலம் குறித்து செபித்து வருவதாகக் கூறினார். ஹசாரேயின் முயற்சிகளால் எளிய மக்களும் இந்தியாவில் நிலவும் ஊழல் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; எனவே, மக்களை இன்னும் சீரியப் பாதையில் வழிநடத்த ஹசாரே தன் உடல் நலனைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.
ஊழல் என்பது இந்திய நாட்டின் மிகப் பெரும் பிரச்சனை என்பதால், ஹசாரேயின் குழுவினரும், இந்திய அரசும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வழிகளைத் தீர ஆராய, இந்திய ஆயர் பேரவையின் தலைவர் என்ற முறையில் அவர்களுக்குத் தன் சிறப்பான விண்ணப்பத்தை முன் வைப்பதாக கர்தினால் Gracias கூறினார்.
அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் மக்களின் மிக முக்கியமான பிரச்னையை மையப்படுத்தியது என்பதால், இதற்குத் தன் ஆதரவைக் கூறிய புது டில்லிப் பேராயர் Vincent Concessao, இப்போராட்டம் மக்களாட்சி முறைப்படி நடத்தப்படுவதை தான் இன்னும் அதிகம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவரான பேராயர் Concessao இந்தியாவின் மிகப் பெரும் பிரச்சனையான ஊழலுக்குத் தகுந்த தீர்வு கிடைப்பதில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டுமேயொழிய, உணர்வுகள் மேலோங்கி, இப்போராட்டம் வன்முறையில் முடியும் ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்று தன் வேண்டுகோளை முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.