2011-08-25 14:57:27

ஆகஸ்ட் 26 வாழ்ந்தவர் வழியில்.... அருளாளர் அன்னை தெரேசா


அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்றவருமான அருளாளர் அன்னை தெரேசா 1910ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி பிறந்தார். ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பது இவரது திருமுழுக்குப் பெயராகும். கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள். அன்னை தெரேசா 1950ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறரன்பு மறைபோதகச் சபையை தோற்றுவித்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஏழை எளியோர்க்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார். அன்னை தெரேசாவின் அசாதாரண மனிதாபிமானப் பணிகள் 1970களில் சர்வதேச அளவில் புகழ் பெறத் தொடங்கின. இதற்கு முக்கிய காரணமாக Malcolm Muggeridge என்பவரின் “Something Beautiful for God” என்ற விளக்கப்படமும் அமைந்தது. இவர் 1979 ஆம் ஆண்டில் அமைதி நொபெல் விருது, 1980 ஆம் ஆண்டில் மனிதநேயப் பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளைப் பெற்றிருப்பவர். அன்னை தெரேசாவின் மரணத்தின் போது அவரது சபையினர் 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்கள் இருந்தன. இதில் எச்ஐவி/எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும். அன்னை தெரேசா 1997 ம் ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி இறைபதம் அடைந்தார். இவர் 2003, அக்டோபர் 19ம் தேதி அருளாளர் என அறிவிக்கப்பட்டார்.
அன்னை தெரேசா தனது நாட்குறிப்பில், “தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் தர்மம் எடுக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், முந்தைய அவரது சபைக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும்” தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.
“அமைதி என்பது ஒரு புன்னகையில் ஆரம்பிக்கிறது”. இதைச் சொன்னவர் அருளாளர் அன்னை தெரேசா








All the contents on this site are copyrighted ©.