2011-08-24 15:15:28

ஆனாதைக் குழந்தைகளுடன் இப்தார் விருந்தில் கலந்து கொண்ட ஈராக் நாட்டு பேராயர்


ஆக.24,2011. இரமதான் பண்டிகையையொட்டி, ஈராக் நாட்டில் கிர்குக் உயர்மறைமாவட்டப் பேராயர் லூயிஸ் சாக்கோவும், கிர்குக் இஸ்லாமியத் தலைவரும் இத்திங்கள் மாலை 30 ஆனாதைக் குழந்தைகளுடன் இப்தார் (Iftar) எனப்படும் மாலை விருந்தில் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் மையம் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் கலந்து கொண்ட பேராயர் சாக்கோ, கிறிஸ்தவர்கள் இஸ்லாமியருடன் கொண்டிருக்கும் உறவுக்கு அடையாளமாக ஒரு தொகையை அக்குழந்தைகளுக்கு அளித்தார்.
பேராயரின் இச்செயலைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட இஸ்லாமியத் தலைவர் Sheikh Ahmed Mohammed Amin பிறரன்புச் சேவை என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கிடக்கும் ஒரு முக்கிய பண்பு என்று கூறினார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்துவரும் பல வன்முறைகளுக்கு மத்தியில், இரமதான் மாத நோன்பும், இப்தார் உணவுப் பகிர்வும் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் இணைக்க உதவும் என்று பேராயர் சாக்கோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.