2011-08-23 14:31:59

விவிலியத்தேடல் – இம்மட்டும் காத்தவர் இந்த வயதிலும் காப்பார் - திருப்பாடல் 71


ஆக.23,2011. முதியவர் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைக் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்தார். அவரால் அதைத் தூக்கிவர முடியவில்லை. ஆதலால் மனத்தில் மிகுந்த வேதனை அடைந்தார். அப்பாடா... என்று விறகுக் கட்டைகளை ஓரிடத்தில் கீழே இறக்கி வைத்துவிட்டுப் புலம்பினார். “கடவுளே, நான் எத்தனை நாள்களுக்கு இப்படிக் கஷ்டப்படுவது? என்னைச் சீக்கிரம் உம்மிடம் அழைத்துக் கொள்ள மாட்டாயா?” என்று சலிப்போடு கூறிக் கொண்டே உட்கார்ந்தார். உடனே எமன் அவர்முன் தோன்றினார். மிகவும் கடுகடுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டு “என்னை எதற்குக் கூப்பிட்டாய்?” என்று கேட்டார். எமனின் கோபமான முகத்தைப் பார்த்துப் பதறிப் போன முதியவர், “இல்லை சாமி, இல்லை, இந்த விறகுக் கட்டைகளை என் தலைமீது தூக்கி வைப்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன், வேறு ஒன்றுமில்லை” என்று பதில் சொன்னார்.
எமனிடம் பேசிய இந்த வயதானவர் போல்தான் இன்று பல முதியவர்கள், மூப்பு காரணமாக வரும் கஷ்டங்களால் சாக விரும்புவதாகப் புலம்புகின்றனர். ஆனால் யாராவது ஒரு முதியவரிடம் சென்று இன்று இரவே நீங்கள் சாகப் போகிறீர்கள் என்று சொன்னால் மரணபயம் அவர்களைக் கவ்விக் கொள்ளும். யாரும் அவ்வளவு எளிதாகச் சாக விரும்புவதில்லை. மூப்பு, நோய்களின் தோட்டம் என்பார்கள். வயதான காலத்தில் தோல்களில் சுருக்கம் ஏற்படுகின்றது, உடல் தளர்ச்சி அடைகிறது. அத்துடன் மனபலமும் குறைகிறது. நோய்களும் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன. தான் ஓர் உதவாக்கரை என்ற எண்ணம் வளர்கிறது. நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவர, தனிமை அவர்களை வாட்டுகின்றது. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுவதால் ஒதுக்கப்பட்டதாகவும் உணர்வு உருவாகின்றது. பணக்கஷ்டமும் சிலருக்கு உண்டு. அனைத்திற்கும் அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை வேறு. Richard Needham என்பவர் சொன்னது போல, தனது வாழ்க்கையின் முதல் பாதியில் பிறர் என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லும் ஒருவர், அடுத்த பாதியில் அவர் என்ன செய்திருக்க வேண்டுமென மற்றவர் சொல்கின்றனர். ஒரு மகன் தனது வயதான தந்தையிடம், நீங்கள் இப்படியெல்லாம் செய்யாமல் விட்டதால்தான் நான் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறேன் என்று சொன்னார். இது இந்த மகனிடமும் ஒருநாள் அவரின் பிள்ளை சொல்லத்தான் போகிறது. காய்ந்த ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரித்த கதை நேயர்களுக்குத் தெரியும் தானே.
இந்த நவீன மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் வயதானவர்கள் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை. ஏன் தமிழகத்தில்கூட வயதானவர்களைப் “பெருசு” என்று ஏளனமாக அழைப்பதைக் கேட்க முடிகின்றதே. முதியோர், நிதி அளவில் சுமையாக இருப்பதாகவும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில், வயதானவர்கள் தலையிடுவதாக இளைய தலைமுறையில் பலர் நினைக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு கொலராடோ மாநில ஆளுனராக இருந்த ரிச்சர்டு லாம் (Richard Lamm) என்பவர், ஆளுனராக இருந்த போது மாநில மக்களின் நலவாழ்வுக்கு ஆகும் செலவுகள் பற்றிக் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது அவர், “வயதானவர்கள் சாக வேண்டியவர்கள். நமது பாதையினின்று வெளியேற்றப்பட வேண்டியவர்கள்” என்று சொன்னதாக ஓர் ஊடகச் செய்தியில் வாசித்தோம். சில நாடுகளில் காருண்யக் கொலை அமலில் இருக்கின்றது அல்லவா! “முதியவர்களின் புன்சிரிப்புகள் இருந்த இடங்களையே தோல் சுருக்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன” என்று Mark Twain சொன்னக் கூற்றை இந்த நாடுகளின் தலைவர்கள் நினைத்துப் பார்க்கலாம்.
ஆனால் சீனா போன்ற சில நாடுகளில் வயதானவர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள் என்றும் செய்திகளில் வாசிக்கிறோம். இன்றைய உலகில் வயதானவர் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. மனிதரின் ஆயுட்காலமும் அதிகரித்து வருகின்றது. முதியோர் பராமரிப்பு இல்லங்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் ஒரு வயதானவரிடம் சென்று அவர்கள் எப்படிச் செபம் செய்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்களேன். நான் எங்களது சபையில் வயதான சகோதரிகளை அண்மையில் சந்தித்த போது பலர் என்னிடம் என்ன சொன்னார்கள் தெரியுமா?. “அம்மா, என்னை ஆண்டவர் சீக்கிரம் அழைத்துக் கொள்ளட்டும் எனச் செபியுங்கள். எப்பொழுது என்னைக் கூப்பிடுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்ந்த நாட்கள் போதும்” என்று. இப்படி அவர்கள் சொன்ன போது அவர்கள் முகத்தில் மூப்பின் அந்த வேதனைகளை உண்மையிலேயே உணர முடிந்தது. முதுமையும் நோயும் இணைபிரியாச் சகோதரிகள், இவை தவிர்க்க முடியாத நிகழ்வுகள் என்ற உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
முதியவர்கள், மூப்பின் நோய்களால் கஷ்டப்படுகிறவர்கள், கடின நோயால் வருந்துவோர் ஆகியோர் செபிப்பதற்கு ஏற்றது திருப்பாடல் 71. இத்திருப்பாடலில், முதிர் வயதில் உள்ளோருக்கு ஆறுதல் தரும் வசனங்கள் உள்ளன. இப்பாடலின் சில வரிகளைக் கேட்போம்.
“ஆண்டவரே! என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும். கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும். என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன். நீரே எனக்கு உறுதியான அடைக்கலம். முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும். என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே. என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர். கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்: அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள். அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை என்று அவர்கள் சொல்கின்றார்கள். கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும். என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும். கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர். வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும். என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும்”.
நோயிலும் முதிர் வயதிலும், உடலும் மனமும் சோர்ந்து போகும் போது, உறவுகளால் கைவிடப்பட்டதாக உணரும் போது, அன்பர்களே, ஆறுதல் தந்து தேற்றுவதற்கு ஆண்டவர் இருக்கிறார். நீங்கள் வேறு எங்கும் யாரிடமும் சென்று புலம்பத் தேவையில்லை. அந்தப் புலம்பல் உங்களுக்குப் பலன்தாரது. ஆனால், தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் ஒவ்வொரு பருவமாக உங்களைப் பாதுகாத்து வந்த தேவன், இந்த தள்ளாத வயதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயமாக இல்லை. உங்களுக்கு உள்ளும் புறமும் மேலும் கீழும் இருந்து காத்து வரும் கடவுள் நோயில் உங்களுடன் இருக்கிறார். உங்கள் வேதனைகளைத் தாங்கிக் கொள்ள சக்தி தருகிறார். எனவே அவரில் உங்கள் பற்றுறுதியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். கடவுள் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்துங்கள். திருப்பாடல் 71 ல் தள்ளாத வயதினர் ஒருவர் செபிக்கிறார்....
“ஆண்டவரே, என் வாழ்நாளில் நீர் செய்த உம் அருட்செயல்களை என்னால் கணிக்க முடியாது. இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. நீரே என் அடைக்கலப் பாறை. என் முதிர் வயதில், முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும், என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்.....”
முதுமையில், நோயில் கஷ்டப்படும் உள்ளங்களே, இவ்வாறு நீங்களும் செபியுங்கள். அப்போது முதுமையில் இயற்கையாகவே எதிர்கொள்ள வேண்டியவைகளைத் தைரியமாகச் சந்திக்கலாம்.
இத்தாலியில் 70 வயது பாட்டியை வயதானவர் என்று சொன்னால் அது அவர்களுக்குப் பிடிக்காது. முதியோர் இல்லங்களில் பலர் 80, 85 வயதிலும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 73 வயது யோனா சொன்னார் – எனக்கு ஓய்வு என்பது மறு உலகமே என்று. எனவே முதியோரே, நீங்கள் பணியிலிருந்து ஓய்வு அடைந்திருக்கலாம். ஆனால் உங்களது கனவுகளுக்கு ஓய்வு வயது என்பதே கிடையாது. எனவே அவற்றை உயிரோட்டமுடையதாகச் செய்யுங்கள். நீங்கள் பெற்ற விசுவாச வாழ்க்கையை, வாழ்க்கை அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுங்கள். அதேசமயம், இளையோரே, முதியோரை மதித்து நடங்கள். உங்களுக்கும் இப்படியொரு காலம் வரும் என்பதை மறவாதீர்கள். வயதானவர்களை மதிப்பது பல ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும் என்று சீராக் நூல் சொல்கிறது.
90 வயதைத் தாண்டிய அந்த வீட்டுத் தாத்தா தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த பேரன் கேட்டான் – “தாத்தா, இந்த வயதிலும் ஏன் இந்த வீண் வேலை?. இப்படி வேலை செய்து என்ன சாதிக்கப் போகிறீர்கள், சும்மா இருக்க முடியாதா?” என்று. அதற்கு அந்த 90 வயது தாத்தா, சிரித்துக் கொண்டே, “தம்பி, 90 வயது என்ன தள்ளாத வயதா?, சும்மா இருப்பதா?. உனக்குத் தெரியுமா? பெர்ட்டிரன்ட் ரஸ்ஸல், சர்வதேச அமைதிக்கான புத்தகம் எழுதியது தனது 94வது வயதில். அயர்லாந்து அரசுத்தலைவராக ஏமன்டி வாலெரா பணியாற்றியது தனது 91வது வயதில். பாலே நடனக் கலைஞர் அலெக்ஸாண்ட்ரா நடனமாடி வகுப்பு எடுத்தது தனது 90 வது வயதில். தம்பி லியோ டால்ஸ்டாய் தனது 82வது வயதில் எழுதிய நூலின் பெயர் தெரியுமா?
“என்னால் சும்மா இருக்க முடியாது” என்பதுதான் அத்தலைப்பு.
முதியோரே, மூப்பிலும் உங்களால் சும்மா இருக்க முடியாது. எனவே உங்களது நிறைவேறாதக் கனவுகளைச் செயல்படுத்துங்கள்.
“ஆண்டவரே, என் வாழ்நாளில் நீர் செய்த உம் அருட்செயல்களை என்னால் கணிக்க முடியாது. இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. நீரே என் அடைக்கலப் பாறை. என் முதிர் வயதில் கைவிடாதேயும், என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்.....”








All the contents on this site are copyrighted ©.