2011-08-23 15:00:18

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணாமற்போன இரு தமிழ் கத்தோலிக்கக் குருக்களுக்கான நீதி கேட்டு விண்ணப்பம்


ஆக 23, 2011. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணாமற்போன இரு தமிழ் கத்தோலிக்கக் குருக்கள் குறித்த விவரங்களைக்கேட்டு அரசை விண்ணப்பித்துள்ளனர் அக்குருக்களின் உறவினர்களும் பொதுநிலை விசுவாசிகளும்.
குருக்கள் திருச்செல்வம் நிகல் ஜிம் ப்ரவுன் மற்றும் வென்சஸ்லாஸ் விமலதாஸ், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ந்தேதி பாதுகாப்பு துருப்புகளின் பிடியிலிருந்த பகுதியில் காணாமற்போய் ஐந்து ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், இவர்கள் காணாமற்போனது எவ்விதம் என்பது குறித்த உண்மைகள் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ளனர் விசுவாசிகள்.
சுதந்திரமான, நியாயமான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இக்குருக்களுக்கென மண்டைத்தீவு தூய பேதுரு மற்றும் பவுல் கோவிலில் இடம்பெற்ற திருப்பலியில் கலந்து கொண்டோர் விண்ணப்பித்தனர்.
காணாமற்போவதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அல்லைபிட்டி தூய ஃபிலிப் நேரி கோவிலின் பங்குகுருவாக நியமிக்கப்பட்ட குரு ஜிம், அவ்வாண்டு ஆகஸ்ட் 12ந்தேதி இடம்பெற்ற விமான குண்டு தாக்குதலில் காயமுற்ற மக்களுக்கு தன் பங்குதளத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதலில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் இழக்கப்பட்டதில் 6 குருக்களும், எண்ணற்ற திருச்சபைப் பணியாளர்களும் அடங்குவர்.








All the contents on this site are copyrighted ©.