2011-08-22 15:06:23

வாரம் ஓர் அலசல் – உனக்கு நீயே பகையாய் இராதே


ஆக.22,2011. அவர் மாபெரும் செல்வந்தர். ஆனால் அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் இல்லை. இந்த மகிழ்ச்சியைத் தேடிப் அவர் பல நாடுகளுக்குச் சென்றார். மது, மாது என்று எல்லாவற்றிலும் தேடினார். ஆனால் தேடியது மட்டும் கிடைக்கவில்லை. துறவறத்தை நாடினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று யாரோ சொல்ல... அந்த முயற்சியிலும் இறங்கினார். தனது வீட்டிலிருந்த தங்கம், தாமிரம், வைரம், வைடூரியம் என எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு ஒரு யோகியின் காலடியில் கொண்டு போய் வைத்தார். “சுவாமி, எனக்கு இவற்றில் எதுவுமே வேண்டாம். ஆனால் மகிழ்ச்சியை மட்டும் தாருங்கள்” என்றார். அந்த யோகி அந்தச் செல்வந்தர் சொன்ன எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கொண்டு வந்திருந்த மூட்டையை மட்டும் அவசர அவசரமாகப் பிரித்தார். கண்ணைக்கூச வைக்கும் ஒளியுடன் மின்னின அந்தப் பொருட்களைப் பார்த்தார். உடனே அந்த மூட்டையைச் சுருட்டித் தனது தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கினார். அந்தப் பணக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏமாந்து விட்டோமே என நினைத்து யோகியைத் துரத்திக் கொண்டு ஓடினார். ஆனால் யோகியின் ஓட்டத்துக்கு அந்தப் பணக்காரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. யோகி சந்து பொந்து என ஓடிப் பின்னர் தான் புறப்பட்ட அந்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார். அப்போது அந்தப் பணக்காரனைப் பார்த்துப் “பயந்து விட்டாயா?, இந்தா உன் செல்வம், இதை நீயே வைத்துக் கொள்” என்றார். தன்னை விட்டுப் போன செல்வங்கள் அனைத்தும் தனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் அந்தப் பணக்காரன். அப்போது அந்த யோகி “நீ இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தப் பொருள்கள் உன்னிடம்தான் இருந்தன. ஆனால் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே பொருள்கள்தான். ஆனால் உன் மனதில் மகிழ்ச்சி இருக்கிறது. எனவே மகிழ்ச்சி நமக்கு வெளியே இல்லை, அது நமக்குள்தான் இருக்கின்றது என்ற உண்மையைப் புரிந்து கொள்” என்றார்.
மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கின்றது? இந்தக் கேள்விக்கு இதே போன்ற பதிலையே பல யோகிகள் சொல்கிறார்கள். ஆனால் உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு மகிழ்ச்சி புகைப்பிடித்தலில் இருப்பதாகத் தெரிகிறது. நேற்று மாநகரப் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போதுகூட சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த ஒரு விடலைப் பருவச் சிறுமியும் இதேபோல்தான் தெரிவித்தாள். “புகைபிடிக்காதே, மகிழ்ச்சியாக இரு” என்ற ஒரு விளம்பரத்தைக் கடந்த வாரத்தில் வாசிக்க நேர்ந்தது. ஏன் இப்படியொரு விளம்பரம்? ஏன் பொதுவான இடத்தில், எல்லார் கண்ணிகளிலும் படக்கூடிய இடத்தில் இப்படியொரு விளம்பர வரிகள்? புகையிலை மகிழ்ச்சியான வாழ்க்கையோடு இணைத்துப் பேசப்பட்டிருக்கிறதே என்று நினைத்தேன். உலக நலவாழ்வு நிறுவனமும் மருத்துவ அமைப்புகளும் அடிக்கடி வெளியிட்டு வரும் அதிர்ச்சிதரும் புள்ளி விபரங்களைக் கேட்டால் இந்த விளம்பரம் ஏன் என்ற உண்மை புரியும்.
புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர். வயதுவந்தோர் மத்தியில் இடம் பெறும் இறப்புக்களில் பத்துக்கு ஒன்று வீதம் புகையிலை தொடர்புடைய நோயால் இடம் பெறுகின்றது. 11 விழுக்காடு மரணங்கள், இரத்தம் ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் மாரடைப்பாலும், 70 விழுக்காட்டுக்கு அதிகமான மரணங்கள் நுரையீரல் பாதிப்பாலும் இடம் பெறுகின்றன. புகையிலையைப் பயன்படுத்துவதே இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் தற்போதைய நிலை நீடித்தால் 2030ம் ஆண்டுக்குள் 80 இலட்சத்துக்கு அதிகமானோர் ஆண்டுதோறும் இறப்பார்கள். இந்த இறப்புக்களில் எண்பது விழுக்காடு வளரும் நாடுகளில் இடம் பெறும். உலகில் புகைப்பிடிப்பவர்களில் 50 கோடிக்கு மேற்பட்டவர்கள், புகையிலை தொடர்பான நோயால் பாதிக்கப்படுவார்கள்.
இதுமட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. புகையிலை தொடர்புடைய நோய்கள் பொது நலவாழ்வுக்கும் பெரும் செலவை உண்டு பண்ணுகின்றன. அதேசமயம், புகையிலையைப் பயன்படுத்துவோர் நோயினால் தொடர்ந்து தாக்கப்படுவதால் அவர்களின் உற்பத்தித் திறனும் குறைகிறது. இவர்கள் சீக்கிரமே இறந்து விடுவதால் இவர்களது ஊதியத்தை நம்பியிருக்கும் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும், புகையிலைப் பயன்பாடும் வறுமையும் ஒன்றோடொன்று தொடர்புடையன. எவ்வாறெனில் மிக வறிய மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், குடும்பங்கள் தங்கள் வருவாயில் பத்து விழுக்காடு புகையிலைக்கெனச் செலவிடுகின்றன. அப்படியானால் இந்தக் குடும்பங்கள் உணவு, கல்வி, நலவாழ்வு ஆகிய அடிப்படைத் தேவைகளுக்குச் செலவைக் குறைக்க வேண்டியிருக்கிறது. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் கல்வியறிவு இல்லாத நிலையையும் அதிகமாக்குகின்றது. புகையிலைப் பயன்பாட்டின் பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களை அறிவிக்கும் உலக மற்றும் தேசிய அமைப்புகள், இந்த எச்சரிக்கைகளை முன்வைக்கின்றன. எனவே புகைப்பிடிக்கும் பழக்கமுடையோர், புகையிலையைப் பயன்படுத்துவோர் சிந்திக்க வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு எப்படி, ஏன் அடிமையானோம், இதனால் தான் மட்டுமல்ல, தன்னால் எத்தனைபேர் பாதிப்படைகிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உண்மையான மகிழ்ச்சி புகைப்பிடிப்பதில் இல்லை, புகையிலையை மெல்லுவதில் இல்லை என்பதை உணர வேண்டும்.
கடந்த வாரத்தில் நமது வத்திக்கான் வானொலியில் செய்தி ஒன்றை நேயர்கள் கேட்டிருப்பீர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகரெட் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் அட்டைகளில் புகைப்பழக்கத்தின் ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை வரைபடமாக வெளியிட வேண்டும் என்ற விதிகள் அமலுக்கு வரவுள்ளன. "புகைப்பழக்கத்துக்கு எதிரான அரசின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சின்ன விளம்பர அட்டையாக சிகரெட் அட்டைகள் மாற வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது." இம்முயற்சியானது, புகைப்பழக்கம் உள்ளவர்களைப் பயப்படச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. புகைப்பழக்கத்தால் நோய்த் தாக்கப்பட்டு இறந்த ஒருவரின் சடலம், புகைப்பழக்கத்தால் அரித்துப்போன பல்வரிசை போன்ற படங்களும் இந்த விளம்பரங்களில் அடங்கும். ஆனால் சிகரெட் நிறுவனங்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளன.
பெரு நகரத்தில் வசிக்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அடையாறு புற்று நோய் மையத் தலைவர் டாக்டர் சாந்தா கூறியதாக இத்திங்கள் செய்தியில் வாசித்தோம். தமிழகத்தின் வேதாரண்யச் சுற்றுவட்டாரப் பகுதியில், ராஜாளிக்காடு குமாரவேல், கோடியக்கரை அய்யாசாமி, கோபால், கருப்பம்புலம் அமுதா ஆறுமுகம், நெய்விளக்கு பஞ்சவர்ணம்... என்று கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் பத்துப் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதியில் சென்ற வருடத்தில் மட்டும் 700 பேர் வரை புற்றுநோயால் இறந்தனர். வேதாரண்யம் புகையிலை விளையும் பூமி. அங்கு, அதிவேகமாகப் புற்றுநோய்ப் பரவி வருகிறது. இயற்கை ஆர்வலர்கள், 'புகையிலைக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்தான் புற்றுநோய்க்குக் காரணம்’ என்கிறார்கள். எது எப்படியோ புகையிலையால், புகையிலைப் பயன்பாட்டால், புகைப்பிடிப்பதால் புற்றுநோய்களும் வேறுபல வியாதிகளும் அதனால் மரணங்களும் ஏற்படுவது மட்டும் உண்மை. புகைப்பிடிப்பவர்கள் தங்களை மட்டுமல்ல, தாங்கள் விடும் புகையைச் சுவாசிப்பவர்களையும் இறப்பின் விழிம்புக்குக் கொண்டு போகிறார்கள். ''ஒரு மனித உயிரை இன்னொரு மனிதன் எடுக்க, எந்தவித அதிகாரமும் இல்லை. அப்படியானால் புகைப்பவர்களுக்கு மட்டும் இந்த அதிகாரம் இருக்கிறதா என்ன? பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்களே என்ற உணர்வே இல்லாமல் எத்தனை பேர் புகைப்பிடிக்கிறார்கள்!, எத்தனை பேர் புகையிலையை மென்று துப்புகிறார்கள்!.
புகைப்பிடித்தல் அல்லது புகையிலையை எரித்து அதனுடைய புகையை சுவைக்கும் அல்லது உள்ளிழுக்கும் பழக்கமானது கி.மு. 5000 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. புகைப்பிடித்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்த ஜெர்மன் அறிவியலாளர், 1920களின் இறுதியில் வரலாற்றில் முதன்முறையாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரானப் பிரச்சாரத்தில் இறங்கினர். எனினும் இரண்டாம் உலகப்போரின்போது பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் இம்முயற்சி மங்கிப்போனது. பின்னர் 1950 ஆம் ஆண்டு, உலக நலவாழ்வு அதிகாரிகள் புகைப்பிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலுள்ள தொடர்பை ஆய்வு செய்யத் தொடங்கினர். இன்றும் இந்த ஆய்வுகளும், புகைப்பிடித்தலுக்கு எதிரானப் பிரச்சாரமும் தொடர்கின்றன. என்று வெற்றி கிடைக்கும் இதற்கு?. இந்த வெற்றி யார் கையில் இருக்கிறது?
புகையிலையில், புகைப்பிடித்தலில், போதையில் மகிழ்ச்சியைத் தேடும் சகோதர சகோதரிகளே, உங்கள் மகிழ்ச்சி வெளியே இல்லை, அது உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். ஒருசமயம் ஒருவர் நன்றாகக் குடித்துவிட்டு தெருவில் தாறுமாறாக ஆடிக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது நண்பர் அவரிடம், ஏப்பா, உனது மனைவி இன்று மாலை விதவையாகி விடுவாள், சீக்கிரம் வீட்டுக்குப் போ என்று சொன்னாராம். உடனே அந்தக் குடிகாரர் சப்தமாக அழுது கொண்டே மனைவியைப் பார்க்க வீட்டிற்குச் சென்றாராம். இப்படித்தான் நம் ஒவ்வொருவரிலும் குடியிருக்கும் குடிகாரன், உண்மை இல்லாத பல விடயங்களை நம்ப வைக்கிறான். அவை நமது மகிழ்ச்சியையும் பறித்து விடுகின்றன.
எனவே அன்பர்களே, உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வோம். மகிழ்ச்சி என்பது ஒரு பூட்டு மாதிரி. அறிவு என்பது சாவியைப் போல. அறிவுச் சாவியை எதிர்ப்பக்கம் திருப்பினால் அது மகிழ்ச்சியைப் பூட்டி விடும். அதே சமயம் சரியான பக்கம் அதைத் திருப்பினால் மகிழ்ச்சிக் கதவுகளை அது திறந்து விடும். எண்ணம் ஆயுதத்தை விட சக்தி வாய்ந்தது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலைப் பெறுகிறோம். ஆதலால் நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக அமைப்போம்.








All the contents on this site are copyrighted ©.