2011-08-22 15:24:09

இராக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பு குறைந்து வருகின்றது, பாக்தாத் துணை ஆயர் கவலை


ஆக.22,2011. இராக்கில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையினால் அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது என்று பாக்தாத் கல்தேய ரீதி கத்தோலிக்கத் துணை ஆயர் ஷெல்மான் வர்தூனி (Shlemon Warduni) கூறினார்.
மத்ரித்தில் Aid to the Church in Need என்ற பிறரன்பு உதவி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு உரைத்த ஆயர் வர்தூனி, இம்மாதம் 15ம் தேதி இடம் பெற்ற வன்முறையில் 65 பேர் இறந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்றார்.
இராக்கில் நாடெங்கும் இடம் பெற்ற சுமார் 17 தாக்குதல்களில் பல தாக்குதல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடத்தப்பட்டன என்றும் ஆயர் குறிப்பிட்டார்.
கடந்த 300 ஆண்டுகளில் பார்த்திராத அளவில் தற்சமயம் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் பாக்தாத் துணை ஆயர் கூறினார்.
தற்சமயம் இராக்கில் 2 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவ்வெண்ணிக்கை 2003ம் ஆண்டு ஆக்ரமிப்புக்கு முன்னர் 12 இலட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.