2011-08-20 14:50:01

26வது உலக இளையோர் தினம் – மத்ரித்தில் திருத்தந்தை


ஆக.20,2011. “துன்புறுவோரைக் காணும் போது விலகி ஒதுங்காதீர்கள், இறைவன் உங்களிடமிருந்து சிறந்தவைகளை எதிர்பார்க்கிறார்”.
இவ்வெள்ளி இரவு ஏழு மணி முப்பது நிமிடத்திற்கு மத்ரித் Cibeles வளாகத்தில் தொடங்கிய திருச்சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் உலக இளையோரிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையின் பிரசன்னத்தில் இதுவரை நடைபெற்ற 26வது உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் இந்தச் சிலுவைப்பாதை பக்தி முயற்சி, முதல் மாபெரும் திருச்சபை நிகழ்ச்சியாகும். இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள், சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைத் தியானிக்க அழைக்கின்றது சிலுவைப்பாதை பக்தி முயற்சி. இஸ்பானிய பக்தி முயற்சிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இதில் கலந்து கொண்ட இளையோர் உருக்கமான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். உலகமே மத்ரித்துக்கு வந்து விட்டதாகவும், மத்ரித் நகர், இபேரியன் புனித வாரத்தை, குறிப்பாக, சிலுவைப்பாதையை உலக மேடையில் காட்டியதாகவும் கூறினர். இச்சிலுவைப்பாதையின் 14 நிலைகளின் காட்சிகள் தத்வரூபமாக மரத்தாலான சிலைகளால் வடிக்கப்பட்டிருந்தன. நூற்றாண்டுகளாக இருந்த இடத்திலிருந்து அகற்றப்படாமலிருந்த மலகா திருச்சிலுவைப்பாதையின் ஒரு நிலை, முதல் முறையாக அந்நகரைவிட்டு மத்ரித்துக்குக் கொண்டு வரப்பட்டது. உலக இளையோர் தினத்தின் பிரம்மாண்டமான மரச்சிலுவை, இச்சிலுவைப்பாதையின் முதல் நிலையின் முன்னர் கொண்டுவரப்பட, Ubi caritas அதாவது “அன்பு எங்கே இருக்கின்றதோ” என்று பொருள்படும் பாடலை, உலக இளையோர் தினப் பாடகர் குழு இசைக்கத் தொடங்கியது.
பலரின் ஆன்மீக அனுபவங்களைக் கேட்பதற்கு முன்னர் இந்தச் சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் திருத்தந்தை நிகழ்த்தினார்.
இச்சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகளை “Hermanas de la Cruz" என்ற செவில் திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள் தயாரித்தனர். ஆஞ்சலா தெ லா குரூஸ் என்பவரால் 1875ம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சபைச் சகோதரிகள், சமூகத்தில் மறக்கப்பட்டோர் மற்றும் துன்புறுவோருக்காகச் சேவை செய்து வருகின்றனர். இந்தச் சிலுவைப்பாதைத் தியானங்களும் உலகில், குறிப்பாக, புனித பூமி, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, ஈராக் போன்ற நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கள் மற்றும் இளையோர் பற்றியும், இன்னும், வேலைஇல்லாதோர், ஓரங்கட்டப்பட்டோர், மதுபானம், போதைப்பொருளுக்கு அடிமையானோர், ஹெய்ட்டி, ஜப்பான் போன்ற நாடுகளில் நில நடுக்கங்களால் பாதிக்கப்பட்டோர் எனப் பலவகைகளில் துன்புறும் இளையோரை நினைத்து அவர்களுக்காகச் செபிப்பதாக இருந்தது. எடுத்துக் காட்டாக, இயேசு கல்வாரிக்குச் சிலுவை சுமந்து செல்லும் போது முதல் முறையாகக் கீழே விழுந்ததைச் சித்தரிக்கும் மூன்றாவது நிலையில், பல நாடுகளில் போரில் பலியாகும் அப்பாவிகள் குறித்துச் சொல்லப்பட்டு, அமைதியில் கடவுளின் மீட்புக்காகக் காத்திருக்கும் பலரின் இதயத்தை இயேசு எவ்வாறு அமைதிப்படுத்துகிறார் என்று தியானச் சிந்தனை இருந்தது. இயேசுவின் ஆடைகள் உறியப்படும் நிலை, சிறாருக்கு எதிரானக் குற்றங்கள் பற்றி அமைந்திருந்தது. படுகொலைகள், வன்முறை, கற்பழிப்பு, பாலியல் வன்செயல், போன்றவைகளுக்குப் பலியாகுவோர் பற்றிச் சொல்லி, இன்று உலகில் எத்தனை பேருடைய மாண்பும், குற்றமற்ற பண்பும், மனிதர்மீதான நம்பிக்கையும் பறிக்கப்படுகின்றன என்ற மனதை உருக்கும் சிந்தனைகள் சொல்லப்பட்டு அவர்களுக்காகச் செபமும் செபிக்கப்பட்டது. இறந்த இயேசுவின் உடல் தாயின் மடியில் கிடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லும் 13ம் நிலையில் பசி, நோய், நுகர்வுத்தன்மை எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்காகச் செபிக்கப்பட்டது. இறுதியில் செவில் வியாகுல அன்னை பற்றிய தியானமும் செபமும் இடம் பெற்றன.
ஈராக், ருவாண்டா, புருண்டி போன்ற துன்பங்கள் நிறைந்த நாடுகளின் இளையோர், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் இளையோர், வேலை இல்லாத, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இளையோர் என ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வோர் இளையோர் குழு சிலுவையைத் தூக்கிச் சென்றது. Bayleigh Aschenbrenner என்ற 16 வயது இளைஞி சொன்னார் – “இயேசு நமக்காக இவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் இயேசுவின் பாடுகள் மீது ஈர்க்கப்பட்டுள்ளேன்” என்று. இவ்வாறு பல இளையோர் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வோர் இளையோர் தினத்திலும் இந்தச் சிலுவைப்பாதை பக்தி முயற்சி தவறாது இடம் பெற்று வருகிறது. திருத்தந்தை இந்நிகழ்ச்சியை முடித்து Cibeles வளாகத்தை விட்டு வெளியேறும் போது இளையோர் “Benedicto!” என்று அவரின் பெயரைச் சொல்லிப் பாடிக் கொண்டே இருந்தனர். இத்துடன் இவ்வெள்ளிதின நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன.
இந்நாட்களில் மத்ரித் நகரில் 194 நாடுகளின் சுமார் ஆறு இலட்சம் இளையோர் பல வண்ண உடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் மூன்றாவது நாளான இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில், அதாவது இந்திய நேரம் பகல் 12.30 மணியளவில் மத்ரித் Jardins del Buen Retiro என்ற பூங்காவில் இளையோர் இறைவனிடம் ஒப்புரவாகி வருவதற்கு உதவியாக 200 அருட்பணியாளர்கள், பாவசங்கீர்த்தனம் என்று முன்பு சொல்லப்பட்ட ஒப்புரவு அருட்சாதனத்தைக் கேட்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 118 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இப்பூங்கா, மூன்றாம் சார்லஸ் அரசரால் பொது மக்களுக்கெனத் திறந்து விடப்பட்டது. இங்கு மூன்று இளையோருக்குப் ஒப்புரவு அருட்சாதனத்தை நிகழ்த்தினார் திருத்தந்தை. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் குண்டு துளைக்காத கண்ணாடிக் காரில் Almudena அன்னைமரி பேராலயம் சென்றார். அரச மாளிகைக்கு முன்புறம் அமைந்துள்ள இப்பேராலயத்தில் குருத்துவ மாணவர்க்கெனத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்விளையோர் தினத்தில் கலந்து கொள்ளும் சுமார் ஆறாயிரம் குருத்துவ மாணவர்க்கெனத் திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.
இத்திருப்பலியின் இறுதியில் இஸ்பெயினின் 16ம் நூற்றாண்டு மறையுரையாளர் அவிலா நகர் புனித ஜானை, அகிலத் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித அகுஸ்தீன், புனித பிரான்சிஸ் டி சேல்ஸ், புனித அவிலா தெரேசா, புனித லிசியத் தெரேசா உட்பட தற்சமயம் திருச்சபையில் 33 மறைவல்லுநர்கள் இருக்கின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பேராலயத்திற்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டு இத்திருப்பலியில் பங்கு பெற்றனர். இத்திருப்பலி முடிந்ததும், திருத்தந்தை நீடூழி வாழ்க Viva il Papa என்று இளையோர் ஆரவாரித்துக் கொண்டே இருந்தனர். இத்திருப்பலிக்குப் பின்னர் மத்ரித் பேராயர் இல்லம் சென்று கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. இச்சனிக்கிழமை இரவு மத்ரித் விமானநிலையத்தில் இளையோரின் திருவிழிப்பு இடம் பெறுவது இந்நாளைய முக்கிய நிகழ்ச்சியாக இருக்கின்றது. இந்த நான்கு நாள் பயணத்தை முடித்து ஞாயிறு இரவு உரோம் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.