2011-08-19 16:41:36

பாகிஸ்தானின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறவில்லை


ஆக.19,2011. பாகிஸ்தானின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சராகப் பணிசெய்து கொலையுண்ட Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறாதது குறித்து தலத்திருச்சபை தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardari, நாட்டின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் 185 பெயர்களை இச்செவ்வாயன்று வெளியிட்டார். 2012ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இவ்விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் சிறுபான்மையினர் நாள் பாகிஸ்தானில் கடைபிடிக்கப்பட்டபோது சிறுபான்மையினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பதைக் குறித்தும், அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்க வழிமுறைகள் மேற்கொள்வது குறித்தும் பேசிய பாகிஸ்தான் அரசுத் தலைவர், இப்பட்டியலை வெளியிடும்போது சம உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறதென்று இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் அமைச்சர் Shahbaz Bhattiம் பஞ்சாப் ஆளுநர் Salman Taseerம் முக்கியமானவர்கள். இவ்விருவரும் இவ்வாண்டு சனவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொலையுண்டனர்.
கொலையுண்ட இவ்விரு அரசு அதிகாரிகளில் இஸ்லாமியரான Salman Taseer பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்போது, கிறிஸ்தவரான Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறாமல் போனது கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்திற்குப் பிறகும் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் இடையே வேறுபாடுகள் காட்டும் பாகிஸ்தான் அரசின் இந்தச் செயல்பாடு குறித்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.