2011-08-19 16:27:24

திருத்தந்தையின் இருபதாவது வெளிநாட்டுத் திருப்பயணம் – மத்ரித்தில் திருத்தந்தை


ஆக.19,2011. “கிறிஸ்துவின் மீது கட்டியெழுப்பப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்”. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இது போன்ற கூற்றுக்களை உலக இளையோரிடம் சொல்லி இஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தில் இவ்வியாழன் முதல் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினார். இத்திருப்பயணத்தின் முதல் நாளான இவ்வியாழன் இரவு உள்ளூர் நேரம் இரவு ஏழு மணிக்கு மத்ரித் திருப்பீடத் தூதரகத்திலிருந்து திறந்த காரில் “Plaza de Independencia” என்ற சுதந்திர வளாகத்திற்குப் புறப்பட்டார். அப்போது இந்திய நேரம் இரவு பத்து மணி முப்பது நிமிடங்கள். 3 கிலோ மீட்டர் தூரம் திருத்தந்தை காரில் வந்த போது வழியெங்கும் இளையோர் நின்று கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தச் சுதந்திர வளாகம், ஆஸ்ட்ரியாவின் இளவரசி மார்கரித், மத்ரித் நகர் வந்ததன் நினைவாக 1599ல் அமைக்கப்பட்டது. “Puerta de Alcala” என்ற இவ்வளாகத்தின் நுழைவாயிலில் மத்ரித் மேயர் திருத்தந்தையை வரவேற்று பரிசுப் பொருளும் கொடுத்தார். கர்தினால் மரிய ரோக்கோ வரேலா மற்றும் சில இளையோருடன் அங்குச் சென்ற திருத்தந்தையை அரசக் குதிரை வீரர்கள் குதிரைகளுடன் வரவேற்றனர். அந்நாட்டு மரபுப்படி அக்குதிரைகள் திருத்தந்தையின் முன்னர் மண்டியிட்டு மரியாதை செலுத்தின. ஒரு குதிரை வீரர் திருத்தந்தைக்குப் பரிசுப் பொருளும் அளித்தார். மத்ரித்தின் நினைவுச் சின்னமாக அமைந்திருக்கின்ற இந்நுழை வாயிலில் முக்கியமான அரசியல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
Alcala நுழைவாயிலிருந்து 500 மீட்டரிலிருக்கின்ற “Plaza de Cibeles” என்ற வளாகம் சென்றார் திருத்தந்தை. அங்கு கூடியிருந்த சுமார் ஐந்து இலட்சம் இளையோர் கரகோஷம் எழுப்பி திருத்தந்தைக்கு வரவேற்புக் கொடுத்தனர். இவ்விளையோரில் சுமார் ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து சென்றுள்ளனர். மும்பையிலிருந்து மட்டும் 200 இளையோர் சென்றுள்ளனர். இது தங்களது மிக நேர்ததியான அனுபவமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மத்ரித்தில் நடை பெற்று வரும் இந்த 26வது உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் 194 நாடுகளைச் சேர்ந்த இளையோர் கலந்து கொள்வதைக் குறிக்கும் விதமாக அவ்வளாகத்தில் 194 நாடுகளின் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் முதலில் இத்தினத்தின் பாடலை பாடகர் குழு இசைத்தது.
பின்னர் கர்தினால் ரோக்கோவும், ஐந்து கண்டங்களிலிருந்து ஐந்து இளையோரும் அவரவர் மொழியில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். பின்னர் ஒரு போலந்து இளம்பெண் ரொட்டி மற்றும் உப்பையும், ஒரு கினி நாட்டு இளைஞன் வாழை இலையில் காப்பியையும், ஒரு கொரிய இளம் பெண் ஒரு தட்டில் அரிசியையும், ஒரு தென் அமெரிக்க இளைஞன், அகல் விளிம்புடையப் பாரம்பரியத் தொப்பியையும் ஒரு ஜப்பான் இளம்பெண், மலர்மாலையையும் பரிசாக அளித்தனர் RealAudioMP3 . இந்நிகழ்ச்சி முழுவதும் திருத்தந்தை அந்த மாலையை கழுத்தில் போட்டிருந்தார். இப்பரிசுகளையும் வரவேற்பையும் பெற்ற திருத்தந்தை பல மொழிகளில் வாழ்த்தினார். இளையோர், தங்கள் வாழ்க்கையின் அடித்தளமாக கிறிஸ்துவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து வாழக் கேட்டுக் கொண்டார். இந்நாட்களின் செபம், நட்பு மற்றும் கொண்டாட்டங்கள் ஒருவர் ஒருவரை இயேசுவிடம் கொண்டு செல்ல உதவுவதாக இருக்கட்டும் என்றார். பின்னர் 26வது உலக இளையோர் தினப் பாடகர் குழு, இவ்வுலக இளையோர் தினப் பண்ணைப் பாடியது.
திருத்தந்தையும் தனது உரையை வழங்கினார்.
ப்ரெஞ்ச், சுவாஹிலி, ஸ்பானியம், அராபியம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் மன்றாட்டுகள் இடம் பெற்றன. உலக இளையோரின் இந்த வரவேற்பு நிகழ்ச்சியுடன் இந்த நான்கு நாள் திருப்பயணத்தின் முதல் நாள் நிறைவுக்கு வந்தது.
திருத்தந்தையின் இருபதாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும் இஸ்பெயின் நாட்டுக்கான மூன்றாவது திருப்பயணமாகவும் அமைந்துள்ள இந்தத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இவ்வெள்ளி காலை மத்ரித் திருப்பீடத் தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்திய பின்னர் காலை 9.30 மணிக்கு இந்நாளைய முதல் நிகழ்ச்சியைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். முதலில் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 14 கிலோ மீட்டரிலிருக்கின்ற Zarzuela அரச மாளிகைக்குச் சென்றார். 17ம் நூற்றாண்டில் இஸ்பெயின் அரசர் 4ம் பிலிப்புவால் இம்மாளிகை கட்டப்பட்டது. இங்கு இஸ்பெயின் அரசர் ஹூவான் முதலாம் கார்லோஸ், அரசி சோஃபியா, இளவரசர் பிலிப்பே, இளவரசி லெட்டீசியா, இன்னும் அவர்களது பிள்ளைகளையும் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் சான் லொரென்சோ தெ எல் எஸ்கொரியால் என்ற துறவுமடம் சென்றார். வரலாற்று மற்றும் துறவு வாழ்வின் நினைவுச்சின்னமாக அமைந்திருக்கும் எல் எஸ்கொரியால், 1563க்கும் 1594க்கும் இடைப்பட்ட காலத்தில் 2ம் பிலிப் அரசரால் கட்டப்பட்டது. இது மத்ரித்துக்கு வடமேற்கே சுமார் 50 கிலோ மீட்டரில் இருக்கின்றது. இங்கு இடம் பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 400 அடைபட்ட துறவுமட அருட்சகோதரிகள் உட்பட, 1664 இளம் துறவற அருட்சகோதரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. அங்கு அவர் நுழைந்தவுடன் அருட்சகோதரிகள், “Viva il Papa” என்று முழங்கினர், மகிழ்ச்சியால் துள்ளினர், ஆடிப்பாடினர். இவர்களுக்குத் திருத்தந்தை ஆற்றிய உரையின் சுருக்கத்தைக் கேட்போம்.
இந்நிகழ்ச்சியில் முதலில் கர்தினால் ரோக்கோவும் ஓர் இளம் சகோதரியும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். இச்சந்திப்பிற்குப் பின்னர் பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் அதே இடத்தில் சந்தித்தார் திருத்தந்தை. இவர்கள் பலவண்ணப் பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர். ஓர் இளம் பேராசிரியர் வரவேற்றுப் பேசினார். இங்கு திருத்தந்தை ஆற்றிய கருத்துச் செறிவான உரையின் சுருக்கத்தைக் கேட்போம்.
அகுஸ்தீன் சபைத் தந்தையர் சான் லொரென்சோ ஆலய அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நினைவுப்படத்தை வழங்கினர். இதற்குப் பின்னர் மத்ரித் திருப்பீடத் தூதரகத்தில் இளையோருடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவ்வெள்ளி மாலையில் இங்கு இஸ்பெயின் பிரதமர் ஹோசே லூயிஸ் ரொட்டிரிகெஸ் சாபாத்தெரோவைச் சந்தித்தல், மத்ரித் Cibeles வளாகத்தில் இளையோருடன் திருச்சிலுவைப்பாதையில் பங்கெடுத்தல் இந்நாள் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
“கிறிஸ்துவில் வேரூன்றி அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாக இருங்கள். விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”. தூய பவுல், கொலோசையர்க்கு எழுதிய திருமடல் 2,7 வசனத்தை மையப் பொருளாகக் கொண்டு இந்த 26வது உலக இளையோர் தினம் இடம் பெற்று வருகிறது. இளையோர் விசுவாசத்தில் உறுதிப்பட திருத்தந்தையின் இப்பயணம் உதவும் என நம்புவோம்.








All the contents on this site are copyrighted ©.