2011-08-19 16:40:44

இளம் பேராசிரியர்களுக்கான திருத்தந்தையின உரை : ‘பல்கலைக்கழகம் என்பது மனிதனுக்கேயுரிய உண்மையைத் தேடும் ஓர் இல்லமாகும்’


ஆக 19, 2011. இஸ்பெயின் பல்கலைக்கழகங்களின் இளைய பேராசிரியர்களே, உண்மையைப் பரப்புவதில் நீங்கள் சிறப்புச் சேவையாற்றி வருகிறீர்கள். உங்களோடு நிற்கும் இந்த வேளையில், நான், முன்பு Bonn பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியதை நினைவுகூர்கிறேன். 'கிறிஸ்துவில் வேரூன்றியவர்களாகவும், அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாகவும் நில்லுங்கள்' என்ற இந்த உலக இளையோர் தின தலைப்பு, உங்களின் தனித்தன்மையையும் அழைப்பையும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதில் ஒளியை வழங்குகிறது. ஒருவித குழப்ப நிலையையும், நிலையற்ற தன்மையையும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில் வாழும் இன்றைய இளையோர், யாரைப் பின்பற்றுவது என எங்கே தேடுவார்கள்? சில வேளைகளில் பல்கலைகழக பேராசிரியர்களின் பணி என்பது வேலை வாய்ப்பளிக்கும் ஒரு கல்வியை மட்டுமே வழங்குவதாக அமைந்து விடுகிறது. கல்வியிலும் இத்தகைய ஒரு நுகர்வுக் கலாச்சார அணுகுமுறை பரவலாகக் காணக்கிடக்கின்றது. நேரடி பயனுடையவைகளுக்கு மட்டுமே முதன்மையிடம் என்ற பாதையில் செல்லும்போது அங்கு இழக்கப்படுவது அதிகம் என்பது மட்டுமல்ல, அதன் விளைவுகளும் துன்பம் தருவதாக இருக்கும். தன்னைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற உறுதிப்பாட்டுடன் செயல்படும் அறிவியல் தவறாகப் பயன்படுத்தப்படல், மற்றும், அதிகாரத்தை மட்டுமே நம்பி, அதற்கு மேல் இருக்கும் ஒரு சக்தி குறித்து கவலையின்றி செயல்படும் அரசியல் சர்வதிகாரப் போக்கு போன்றவை உருவாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் பல்கலைகழகங்களின் உண்மை நோக்கமோ, இத்தகைய குறுகியப் போக்குகளிலிருந்து நம்மைக் காப்பதாகும். பல்கலைக்கழகம் என்பது மனிதனுக்கேயுரிய உண்மையைத் தேடும் ஓர் இல்லமாகும். கத்தோலிக்கத் திருச்சபையானது பல்கலைகழகங்களை ஊக்குவித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இளமை என்பது உண்மையைத் தேடுவதற்கும் அதனை கண்டுகொள்வதற்குமான சிறந்த காலம். 'இளமையிலேயே உண்மையைத் தேடு, இல்லையெனில் பின்னர், அது நீ கைக்கொள்வதற்கு முன் தப்பிவிடும்' என்றுரைத்தார் பிளேட்டோ. உண்மைக்கான ஏக்கத்தை ஒரு கொடையாக தனிப்பட்ட முறையிலும் எடுத்துக்காட்டுகள் மூலமும் உங்கள் மாணவர்களுக்கு வழங்குங்கள்.
உண்மைக்கான அக்கறையையும் ஆர்வத்தையும் எச்சூழலிலும் கைவிடாதீர்கள். கல்வி கற்பித்தல் என்பது ஒரு விடயத்தை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, இளைய தலைமுறையை உருவாக்குவதுமாகும். முழு அர்ப்பணம், மற்றும் அன்பையும் பகுத்தறிவையும் விசுவாசத்தையும் புரிந்து கொள்ளல் போன்றவைகளின் பாதையே உண்மையின் முழுமைத்தன்மைக்கான பாதை. நாம் ஏதாவது ஒன்றைக் குறித்து அறிய வேண்டுமானால் முதலில் அன்பால் அதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். புரிந்து கொள்ளுதலும் அன்பும் வெவ்வேறுத் துறைகளைச் சேர்ந்தவை அல்ல. அன்பில் 'புரிந்து கொள்ளுதல்' நிரம்பி காணப்படுகின்றது, புரிந்து கொள்ளுதலில் 'அன்பு' நிரம்பியுள்ளது. உண்மையும் நன்மைத்தனமும் ஒன்றிணைந்து செல்லுமானால் அதுபோல் அறிவும் அன்பும் இணைந்து செல்கிறது.
அன்பை நாம் தேடலாம், அதன் அருகில் செல்லலாம், ஆனால் அதனை முழுமையாக கைக்கொண்டுவிட முடியாது. மாறாக அதுவே நம்மைக் கைக்கொண்டு நமக்குத் தூண்டுதலாக இருக்கும். நாமும் மாணவர்களை நம்மை நோக்கி கவராமல், உண்மையை நோக்கிய பாதையில் அவர்கள் வழி நடக்க உதவ வேண்டும். அந்த உண்மையைத்தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேடுகிறோம். இவ்வாறு, இஸ்பெயின் பல்கலைக்கழகங்களின் இளைய பேராசிரியர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.