2011-08-19 16:21:33

ஆகஸ்ட் 20 வாழ்ந்தவர் வழியில்.......


“நீ இனிமையான ஆளாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் நேர்மையான ஆளாக இரு. இனிமைத்தனம் சில சமயங்களில் உண்மைத்தனத்தை அகற்றி விடும்” இந்தக் கூற்று தனக்கு மிகவும் பிடித்ததாகச் சொல்பவர் இந்திய தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி (Nagavara Ramarao Narayana Murthy). 1946ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கர்நாடக மாநிலத்தில் மைசூரில் பிறந்த என்.ஆர். நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். மின்பொறியியல் பட்டத்தை மைசூர் பல்கலைகழகம் சார்ந்த தேசிய பொறியியல் கழகத்தில் 1967ம் ஆண்டு பெற்றார். பொறியியலில் முதுகலைப் பட்டத்தை கான்பூரிலுள்ள இந்திய தொழிற்நுட்பக் கழகத்தில் 1969ம் ஆண்டு பெற்றார். 2002ம் ஆண்டுவரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாகப் பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவச் செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். என்.ஆர்.நாராயண மூர்த்தி பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்தியக் கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார். 2000ல் இந்திய குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது, 2003ல், ஆண்டின் உலகின் சிறந்த தொழிலதிபர் விருது, 2008ல் இந்திய அரசின் பத்ம விபூசண் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர். 1999ல் அமெரிக்க பங்குச்சந்தை நிறுவனமான NASDAQல் இன்ஃபோசிஸ், முதல் இந்திய கம்பெனியாக இடம் பெற்றது. அப்போது நாஸ்டாக்கின் தலைவர், என்.ஆர். நாராயண மூர்த்தியிடம், "இது நாஸ்டாக்கிற்குச் சிறிய முயற்சியாக இருக்கும், ஆனால் இன்ஃபோசிஸ் மற்றும் இந்திய தொழில் அமைப்புக்கு மாபெரும் நுழைவாயிலாக இருக்கின்றது" என்று குறிப்பிட்டார். இரஷ்ய அரசுத் தலைவர் Vladimir Putin பெங்களூருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது என்.ஆர். நாராயண மூர்த்தியிடம், “இன்ஃபோசிஸ் இரஷ்யாவில் பணியைத் தொடங்குமா?, மென்பொருள் தொழில்நுட்பத்தில் இந்தியா இவ்வளவு விரைவில் அடைந்துள்ள இத்தகைய முன்னேற்றத்திற்குப் பின்னணியிலுள்ள தந்திரம் என்ன?, இரஷ்யாவும் இந்நிலையை எட்டுமா?” என்று வியந்து கேட்டுள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தின் தூதர் என்றழைக்கப்படும் என்.ஆர். நாராயண மூர்த்தி, தனது இவ்வளவு பணிகள் மத்தியிலும், தனது பிள்ளைகளிடம் தினமும் இரு கேள்விகளைக் கேட்பாராம். இன்று நன்றாகச் சாப்பிட்டாயா?, நன்றாகத் தூங்கினாயா? என்பதே அக்கேள்விகள்.







All the contents on this site are copyrighted ©.