2011-08-18 16:03:35

பூனே நகருக்கருகே கோவில் தாக்கப்பட்டது, சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் செயல்


ஆக.18,2011. இந்தியாவில் பூனே நகருக்கருகே வார்ஜே மல்வாடி என்ற இடத்தில் புனித மரியன்னை மலங்கரா கத்தோலிக்கக் கோவில் இத்திங்களன்று தாக்கப்பட்டது, சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் செயல் என்று தலத்திருச்ச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றும், தற்போது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் கண்டனத்திற்குரியதென்றும் பூனே மறைமாவட்ட ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.
இவ்வன்முறையில் ஈடுபட்டக் குழுவினரை விரைவில் கண்டுபிடிக்குமாறு பூனே கத்தோலிக்கர்கள் மகாராஷ்டிரா அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தாக்குதலால் கோவிலுக்கும், பீடத்திற்கும் நிகழ்ந்த அவமரியாதையை போக்கும் விதமாக, இச்செவ்வாயன்று கோவிலைப் புனிதமாக்கும் சடங்கையும், திருப்பலியையும் அருள்தந்தை வர்கீஸ் வலிகோடத் நிகழ்த்தினார்.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணமோ, வேறு பொருட்களோ திருடப்படாமல் இருப்பதும், கோவிலில் எழுதப்பட்டிருந்த அவமரியாதைக்குரிய வாசகங்களும் சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளோர் இதைச் செய்திருப்பர் என்பதற்கு சான்றுகள் என்று அருள்தந்தை வலிகோடத் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.