2011-08-18 16:40:22

திருத்தந்தையின் இருபதாவது வெளிநாட்டுத் திருபப்யணம் – மத்ரித்தில் திருத்தந்தை


ஆக.18,2011. “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன், எழுந்து நில், விழித்துக் கொள். முன்னேற்றம் வேண்டுமானால் முதலில் நம்மிடமும் பின்னர் இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும்”– இவ்வாறெல்லாம் விழிப்புணர்வு தரும் கூற்றுக்களை இளையோரேுக்கு உதிர்த்தவர் சுவாமி விவேகானந்தர். எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக, கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று அழைப்பு விடுத்து வருபவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இவ்வாறு இளையோரின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பெரியோர் இளையோரால் என்றும் போற்றப்பட்டு வருகின்றனர். இந்த இளையோர் 20ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் போற்றிய, தொடர்ந்து போற்றிக் கொண்டிருக்கின்ற முக்கிய ஆன்மீகத்தலைவர் திருத்தந்தை 2ம் ஜான் பால் என்றால் மிகையாகாது. நாளையத் தலைவர்கள் என்று நாடும் நகரமும் வாழ்த்திக் கொண்டே இருக்கும் இந்த இளையோரை தூக்கி நிறுத்த வேண்டும் என்று இவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு இவர்களுக்கென ஓர் உலக தினத்தையும் கத்தோலிக்கத் திருச்சபையில் தொடங்கி வைத்தார் இத்திருத்தந்தை 2ம் ஜான் பால். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவரைப் பின்பற்றி, தற்போதையத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இவ்வுலக தினத்தை உலக இளையோருடன் சேர்ந்து சிறப்பித்து வருகிறார். இவ்வாண்டு இத்தினம் இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் ஆகஸ்ட் 16, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
26வது உலகக் கத்தோலிக்க இளையோர் தினமாகச் மத்ரித்தில் சிறப்பிக்கப்பட்டு வரும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கென இவ்வியாழன் உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பகல் 1 மணிக்கு, உரோம் சம்ப்பினோ விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து மத்ரித் சர்வதேச பரஹாஸ் விமான நிலையம் சென்றிறங்கிய போது உள்ளூர் நேரம் நண்பகலாகும். அங்கு இஸ்பெயின் அரசர், அரசி உட்பட அரசு மற்றும் திருச்சபை பிரமுகர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இடம் பெற்றன.
வத்திக்கான் மற்றும் இஸ்பெயின் நாடுகளின் தேசியப் பண்களும் இசைக்கப்பட்டன. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலில் இஸ்பெயின் அரசர் ஹூவான் கார்லோஸ் உரை நிகழ்த்தினார்.
திருத்தந்தையே, நீவீர், உமது ஆறாண்டுகாலப் பாப்பிறைப் பணியில் மூன்றாவது தடவையாக இஸ்பெயின் வந்துள்ளீர். இது இந்நாட்டின்மீது நீர் கொண்டுள்ள சிறப்புக் கவனத்தைக் காட்டுகின்றது. இக்கால இளையோருக்கு இது எளிதான காலம் அல்ல. வயது வந்தோரின் எடுத்துக்காட்டுகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்றார் அரசர் ஹூவான்.
பின்னர் திருத்தந்தையும் இஸ்பெயின் நாட்டுக்கான தனது முதல் உரையைத் தொடங்கினார். உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இப்பயணம் இடம் பெறுவதால், திருத்தந்தையின் உரையும் உலக இளையோரிடம் பேசுவதாகவே அமைந்திருந்தது. தற்சமயம் சுமார் ஐந்து இலட்சம் உலக இளையோர் மத்ரித்தில் இருக்கின்றனர். முதலில் தனக்கு இந்நாட்டிற்கு வரவேற்பளித்த அனைவருக்கும், சிறப்பாக விமானநிலையத்தில் தன்னை வரவேற்ற இஸ்பெயின் அரசர் மற்றும் அரசிக்குத் தனது சிறப்பு நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை. வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக இந்நிகழ்ச்சியைக் கேட்டும் பார்த்தும் வரும் எல்லாருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்தத் தனது இருபதாவது வெளிநாட்டுத் திருப்பயணத்தின் முதல் உரையை நிறைவு செய்த திருத்தந்தை, பின்னர் அங்கிருந்து திறந்த காரில் மத்ரித் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவு அருந்தினார்.
இந்நாளில் திருத்தந்தை சென்றவிடமெல்லாம் இளையோர் நிறைந்து நின்று தங்கள் ஆரவாரக் குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தனர் எனச் சொல்லத் தேவையில்லை. இவ்வியாழன் இரவு ஏழு மணிக்கு மத்ரித் சுதந்திர வளாகம் சென்று அவ்வளாகத்தில் இளையோர் திருத்தந்தைக்கு வரவேற்பு வழங்குவது இம்முதல் நாள் பயணத்திட்டத்தில் உள்ளது. திருத்தந்தை உரோமையிலிருந்து புறப்படும் போது இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பினார்.
இஞ்ஞாயிறுவரை மத்ரித்தில் இளையோரின் அன்பு, ஆர்வம் எனும் மழையில் நனையவிருக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இப்பயணம் சிறப்புற அமையச் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.