2011-08-18 16:41:33

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்- இளையோரே, உங்களது மனஅமைதியை எவராலும், எதனாலும் எடுத்துவிட முடியாது, நம் ஆண்டவர் குறித்து வெட்கமடையாதீர்கள்


ஆக.18,2011. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளையோரை, தங்கள் வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் கொடுக்கும் உண்மையைத் தேடும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்துள்ள இளையோரைச் சந்திப்பதற்காக இங்கு வந்துள்ளேன். பேதுருவின் வழிவருபவராக, கிறிஸ்துவே வழியும் உண்மையும், வாழ்வும் என்பதை அறிவிக்கும் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுடன், உங்களனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காக மத்ரித் வந்துள்ளேன். இளையோர் பெருமளவில் மத்ரித் வந்திருப்பதன் நோக்கம் பற்றிய கேள்விக்கு அவர்களே பதில் கொடுக்க வேண்டும். இந்த உலக தினத்தின் விருதுவாக்கு அவர்களிடம் பரிந்துரைப்பது போன்று, கடவுளின் வார்த்தையை, இறைச்சொற்களைக் கேட்பதற்கு விருப்பம் கொண்டு மத்ரித் வந்திருக்கலாம். இதன்மூலம் கிறிஸ்துவில் வேரூன்றிக் கட்டியெழுப்பப்பட்ட தங்களின் உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும். இளையோர் உயிருள்ள இறைவனைக் கண்டு கொள்வது, அவர்கள் இவ்வுலகின் சவால்களைச் சந்திப்பதற்கு அவர்களின் கண்களைத் திறந்து விடும். மேலோட்டமான நிலை, நுகர்வுத்தன்மை, தான் என்ற கோட்பாடு, பாலியல் உறவுகளின் தூய்மையைக் குறைக்கும் பரவலானப் போக்குகள், ஊழல், ஒருமைப்பாட்டுணர்வு இல்லாமை ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளையோர், கடவுள் பற்று இன்றி இந்தச் சவால்களைச் சந்திப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்துள்ளார்கள். கடவுள் அவர்கள் அருகில் இருக்கும் போது வாழ்வுக்கான ஒளி கிடைக்கின்றது. அத்துடன் மனித மாண்பும், உண்மையான சகோதரத்துவமும் மதிக்கப்படும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களைத் தாராளமாக அர்ப்பணிப்பதற்குத் தூண்டுதல் பெறுகிறார்கள்.
இளையோர் தங்களது ஏக்கங்களையும், தங்களது கலாச்சார வளமையையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு ஒருவர் ஒருவரை விசுவாசப் பயணத்தில் ஊக்குவிக்க நல்ல வாய்ப்பாக இந்த முக்கியமான நாள் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் தாங்கள் தனித்துவி்டப்பட்டுள்ளோம் அல்லது அன்றாட வாழ்வில் புறக்கணிப்படுகிறோம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் தனியாக இல்லை. இளையோரே, உங்களையொத்த வயதுடைய பலர் உங்கள் ஏக்கங்கள் போல உணர்வுகளைக் கொண்டு தங்களை முழுமையாகக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து தங்களுக்கு முன்பாக உண்மையிலேயே ஓர் எதிர்காலம் இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் தீர்மானம் எடுக்கும் இந்த முக்கிய தருணங்களைக் கண்டு அவர்கள் பயப்படவில்லை. இதனாலே நான் மகிழ்ச்சியுடன் அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன். அவர்களோடு செபிக்கின்றேன். அவர்களோடு திருப்பலி நிகழ்த்துகின்றேன். தூய்மையான மற்றும் இளமையான தென்றல் போன்று நம்பிக்கைச் செய்தியை உலக இளையோர் தினம் நமக்குக் கொண்டு வருகின்றது.
அதேசமயம் இன்னல்களும் இல்லாமல் இல்லை. உலகெங்கும் இரத்தம் சிந்தும் அளவுக்குக்கூட பதட்டநிலைகளும் மோதல்களும் இடம் பெற்று வருகின்றன. நீதியும் மனிதனின் தனித்துவமிக்க மதிப்பீடும், தன்னலத்திற்கும் பொருளாதார மற்றும் கருத்தியல் கோட்பாடுகளுக்கும் எளிதாகச் சரணடைந்துள்ளன. மிகுந்த அன்போடு இறைவன் படைத்த இயற்கையும் சுற்றுச்சூழலும் மதிக்கப்படவில்லை. மேலும், வேலைதேடும் அல்லது வேலையை இழந்த பல இளையோர், தங்கள் எதிர்காலத்தைக் கவலையுடன் நோக்குகின்றனர். போதைப் பொருளைத் தவிர்க்க அல்லது அப்பழக்கத்திலிருந்து விடுபட பல இளையோருக்கு உதவி தேவைப்படுகின்றது. கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதால் சிலர் பாகுபாடுகளையும் வெறுப்பையும் அடக்குமுறைகளையும் மறைவாக அல்லது பொதுப்படையாகச் சந்திக்கின்றனர். இளையோரே, உங்களுக்கு நான் மீண்டும் எனது முழு இதயத்துடன் இதனைக் கூறுகிறேன். அதாவது உங்களது மனஅமைதியை எவராலும், எதனாலும் எடுத்துவிட முடியாது, நம் ஆண்டவர் குறித்து வெட்கமடையாதீர்கள். இளையோரே விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள். கிறிஸ்தவத் தனித்தன்மையை மறைக்காமல் விவேகத்துடன் தீர்மான மனத்துடன் சான்று பகரும் வாழ்வை வாழுங்கள். ஆழமான மற்றும் பலனுள்ள கிறிஸ்தவ மூலங்களால் நூற்றாண்டுகளாக வளமை பெற்றுள்ள இஸ்பெயின் நாட்டு மக்களின் நல்வாழ்வு மீது அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் தற்சமயம் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. இந்நாட்களில் நான் உங்களோடு இருக்கிறேன். உலகிலுள்ள எல்லா இளையோரை, குறிப்பாக பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கும் இளையோரை நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் இஸ்பெயின் நாட்டையும் புனித கன்னிமரியின் பாதுகாவலில் வைக்கிறேன். இவ்வாறு மத்ரித் விமான நிலையத்தில் உரை நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.