2011-08-16 16:03:03

இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம். கர்தினால் மால்கம் ரஞ்சித் எச்சரிக்கை


ஆக 16, 2011. சர்வதேச விமர்சனத்துக்கு மத்தியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், சர்வதேச அழுத்தத்தின் தன்மையை அது உணரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
விண்ணேற்பு அன்னை விழாவையொட்டி, மன்னார் மடுமாதா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கொழும்பு கர்தினால், ஆயுதங்களுடனான போர் முடிவடைந்து விட்டநிலையில், தற்போது தேசத்தின் சுயநலபோக்குக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
சட்டத்தினால் இலங்கை மக்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் இதயங்களால் பிரிக்கப்பட்டுள்ளதாக உரைத்த கர்தினால் இரஞ்சித், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இதயங்களை வெல்ல சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக உலகின் நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக குற்றம் சுமத்தி வருவதையும், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து வருவதையும் பற்றி குறிப்பிட்ட அவர், எல்லாவற்றையும் நிராகரித்தால், இந்த சிறிய தீவு நாடு முழுமையாக தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும், மற்றும், பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற நிலைப்பாடும் மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால்.
இலங்கையின் அனைத்து பகுதியில் இருந்தும் ஏறத்தாழ 2 இலட்சம் விசுவாசிகள் பங்கேற்ற மடுமாதா விழாத் திருப்பலியை, கர்தினாலுடன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், திரிகோணமலை-பட்டிகோலா துணை ஆயர் ஜோசப் பொன்னையா, அனுராதபுர ஆயர் நார்பர்ட் அந்த்ராதி ஆகியோரும் எண்ணற்ற குருக்களும் இணைந்து நிறைவேற்றினர்.








All the contents on this site are copyrighted ©.