2011-08-16 16:27:53

ஆகஸ்ட் 17, வாழ்ந்தவர் வழியில்...


'தற்கால மறைபரப்புப் பணிகளின் தந்தை' என்று அழைக்கப்படும் வில்லியம் கேரி (William Carey) 1761ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியம், சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் கொண்டிருந்தார். இள வயதிலேயே இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைத் தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
1781ம் ஆண்டு டாரத்தி என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்தனர். 1792ம் ஆண்டு பாப்டிஸ்ட் மறைபரப்புப் பணி கழகத்தை நிறுவியவர்களில் வில்லியம் கேரியும் ஒருவர். "கடவுளிடமிருந்து அருஞ்செயல்களை எதிர்பாருங்கள். கடவுளுக்காக அருஞ்செயல்களை ஆற்றுங்கள்" (Expect great things from God; attempt great things for God.) என்பது இவரது விருதுவாக்காக இருந்தது.
1793ம் ஆண்டு மறைபரப்புப் பணியில் ஈடுபட வில்லியம் கேரி தன் குடும்பத்துடன் இந்தியாவுக்குக் கிளம்பினார். நவம்பர் 9ம் தேதி கல்கத்தா சென்றடைந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்பவரிடம் வங்காள மொழியைக் கற்றார். இந்தியாவில் இவரது மனைவியும் குழந்தைகளும் உடல் நலம் குன்றி, ஒவ்வொருவராக இறந்தனர்.
விவிலியத்தை வங்காளத்திலும், சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்த பெருமை இவரைச் சாரும். செராம்பூரில் மறைபரப்புப் பணியாளர்களின் குழு ஒன்றை அமைத்து, வில்லியம் கேரி அயராது உழைத்தார். இக்குழுவினரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட விவிலியத்தின் அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.
வில்லியம் கேரி 1834ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி தன் 73வது வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.