2011-08-15 14:06:31

நேபாளத்தின் வளமையான வருங்காலத்திற்கென 40 நாள் சிறப்பு செப வழிபாடு


ஆக.15, 2011. நேபாளத்தின் வளமையான வருங்காலத்திற்கான 40 நாள் சிறப்பு செபத்தை நிறைவுக்குக் கொணர்ந்தனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
காத்மண்டுவின் இயேசு சபை தூய சேவியர் பள்ளியில் இடம்பெற்ற இந்த 40 நாள் செப நிறைவு வழிபாட்டில் கலந்து கொண்டோர், கடந்த நாட்களின் செப நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மகளிர்க்கான உரிமைகள், போதைப்பொருள் பயன்பாடு நிறுத்தம், பாலர் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவை குறித்து இந்த நாட்களில் சிறப்பான விதத்தில் செபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
40 நாள் சிறப்பு செப வழிபாடுகள் நிறைவுற்றுள்ளபோதிலும், அனைவரின் உரிமைகளும் சரிசமமாக மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து செபிக்குமாறு செபவழிபாடுகளுக்கு ஏற்பாடுச் செய்தவர்களுள் ஒருவரான கிறிஸ்தவ மறைப்போதகர் பிஷ்னு கானல் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, நேபாள பிரதமர் இஞ்ஞாயிறன்று தன் பதவிவிலகலை அறிவித்துள்ளார்.
அமைதி முன்னேற்ற நடவடிக்கைகளிலும், புதிய அரசியலமைப்பு வரைதல்களிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படாமையால் பிரதமர் ஜல்நாத் கானல் பதவி விலகுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.