2011-08-15 14:08:04

சட்டசபை தீர்மானம் பற்றி விமர்சித்த கோத்தபாயாவிற்கு சிறுபான்மைக் கிறிஸ்தவ கூட்டமைப்பு கண்டனம்


ஆக.15, 2011. தமிழகச் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கீழ்த்தரமாக விமர்சித்த இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியச் சிறுபான்மைக் கூட்டமைப்பின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று அறிவிக்கும்படி ஐ.நா. அவையை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் 8-ந்தேதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கொண்டுவந்து நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் நம்பிக்கையையும், பேரானந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனறார்.
அரசின் இந்தத் தீர்மானத்தை இலங்கை அதிபர் ராஜபக்சாவின் தம்பியும், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கீழ்த்தரமாக விமர்சித்திருப்பதற்கு, இந்தியச் சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவக் கூட்டமைப்பு, இந்தியத் தன்னாட்சி திருச்சபைகள் மாமன்றம், மற்றும் இந்திய ஆயர்கள் அவை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பேராயர் பிரகாஷ் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.