2011-08-15 13:21:46

ஆகஸ்ட் 16 வாழ்ந்தவர் வழியில்.....


புகழ் பெற்ற பத்மாவதி சரித்திரம் (1898), முத்துமீனாட்சி (1903), விஜயமார்த்தாண்டம் (1903), தில்லை கோவிந்தன் (1903), சத்யானந்தா (1909), போன்ற பல நாவல்களையும், உதயலன் (1903), திருமலை சேதுபதி (1910), மணிமேகலை துறவு (1918), ராஜமார்த்தாண்டம் (1919), பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924) போன்ற நாடகங்களையும், இந்திய தேசிய கீதங்கள், புதுமாதிரி கல்யாணப் பாட்டு உட்பட 20 கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதியிருப்பவர் அ. மாதவையா (A. Madhaviah). இவர் 1914 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்ட இந்தியக் கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்த இவர், தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். அ.மாதவையாவின் எழுத்துப்பணி அவரது இருபதாம் வயதிலேயே தொடங்கியது. இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாயப் பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார் அ. மாதவையா. இவர், அக்காலக் குடும்ப மரபுப்படி தனது 15 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து பெண், மூன்று ஆண் என்று எட்டுப் பிள்ளைகள். பிரபலங்களான மீனாக்ஷி தியாகராஜன், கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் அ. மாதவையாவுடைய பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.