2011-08-13 15:16:05

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு கூற்று. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் இந்த எண்ணத்தை பிற மாநிலத்தவரிடம், பிற நாட்டினரிடம் சொல்லி, விளக்கம் தந்து, பெருமைபட்டிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணத்தைச் சொல்ல எனக்குள் தயக்கம் அதிகமாவதையும் உணர்ந்து வருகிறேன். வந்தாரை, தமிழகம் தேடி தஞ்சம் புகுந்தாரை, ஏன்... தமிழகத்திலேயே வாழும் பல பிரிவினரை தமிழகமோ, அங்கு வாழும் தமிழர்களோ உண்மையில் வாழ வைத்திருக்கிறோமா என்ற கேள்வி என் மனதில் இப்போது அடிக்கடி நெருடுகிறது.
தமிழகத்தில் நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வோர் ஊரின் எல்லையைத் தொடும்போதெல்லாம் நம் மனதை மகிழ்விக்கும் ஒரு வாசகம் சாலையோரம் இருக்கும். உதாரணமாக, சென்னையை நோக்கிச் செல்லும்போது, "சென்னை மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஊரின் முகப்பிலும் இத்தகைய வரவேற்பு நமக்குக் காத்திருக்கும். அதேபோல், அந்த ஊரைவிட்டுச் செல்லும்போது, "நன்றி... மீண்டும் வருக" என்று அந்த ஊர் நம்மை மீண்டும் வரவேற்கும்.
அயல் நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு விமான நிலையத்திலும் வரவேற்பு வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும். விமானம் தரையிறங்கியதும், வரவேற்கும் வார்த்தைகள் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்.
உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு நகரமும் "நீங்கள் இங்கே வரக் கூடாது, உங்களுக்கு இங்கே அனுமதியில்லை" என்று பகிரங்கமாக முழங்குவது இல்லை. ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? நாடு விட்டு நாடு செல்பவர்களை, ஊர்விட்டு ஊர் செல்பவர்களை 'வாருங்கள்' என்று வார்த்தையால் சொல்லிவிட்டு, 'வராதீர்கள்' என்று செயல்களால் காட்டும் போக்கு பெருகிவருகிறது இன்றைய உலகில்.

நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று உலகில் பாகுபாடுகள், பிரிவுகள் வளர்ந்து வருவதால், சண்டைகள், கலவரங்கள் பெருகி வருகின்றன. கடந்த பத்து நாட்களாய் இங்கிலாந்து நாட்டில் நடந்த கலவரங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அதற்கு முன், மும்பையில், அதற்கு முன் லிபியாவில், அதற்கு முன் எகிப்தில்... என்று 2011ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டில், நகரில் கலவரங்கள் வெடிப்பதை நாம் பார்த்து, கேட்டு பழகிவிட்டோம். உலகம் தன்னையே ஒரு முறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. இந்த 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது... ஏன் ஒரு பத்து நிமிடங்களாவது உலகம் முழு அமைதியில் சுழல்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி. குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, அரிவாள் வெட்டு, கத்திக் குத்து என்று பூமி காயப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இக்கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது, காயப்படுவது, உயிர்பலியாவது யார்? இளையோரே. இங்கிலாந்து கலவரங்களில் ஈடுபட்டிருந்த இளையோரைக் குறித்து Ellen Teague என்ற இளம்பெண் செய்தித்தாள் ஒன்றில் கூறியிருந்த எண்ணம் என் கவனத்தை ஈர்த்தது. "நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கையை இளையோர் இழந்து வருகின்றனர். அதனால், இன்றைய உலகை அழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்று அவர் சொன்னது பெருமளவு பொருள் உள்ளதாக எனக்குப் பட்டது. இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:
இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.
நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகள்.

விவிலியத்தில் இதுபோன்று காணக்கிடக்கும் உறுதி மொழிகள் பலருக்கு மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. இன்றும் தருகின்றன. அவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காந்தி விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை ஆழமாக வாசித்த பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கியிருந்த இந்தியாவுக்கு கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை எடுத்துச் சொல்ல அவர் ஒரு ஞாயிறன்று கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில் ஐரோப்பிய இனத்தவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென உள்ள கோவிலுக்கு அவர் செல்ல வேண்டும் என்றும் கூறினார். காந்தி கோவிலை விட்டு வெளியேறினார். மீண்டும் அவர் கிறிஸ்தவக் கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாகவே இருப்பதே மேல்" என்று அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. நாம் வாழும் நடைமுறை உலகம் இன்னும் பிளவுபட்டிருக்கிறது என்பதை இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதி, கடந்த புதனன்று கடைபிடிக்கப்பட்ட 'கறுப்புநாள்' நினைவுபடுத்துகிறது.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார். இஸ்ரயேல் மக்களிடையிலேயே பெண்களுக்குச் சரியான இடம், தகுதி இவை வழங்கப்படவில்லை. அவர்கள் மத்தியிலேயே பெண்கள் பொது இடங்களில் கூட்டத்திற்கு முன் வருவது கூடாது; கூட்டத்தில் பேசக் கூடாது என்று பல விதி முறைகள் இருந்தன. இச்சூழலில், இஸ்ரயேல் இனத்தைச் சாராத, தாழ்த்தப்பட்ட புற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் துணிவுடன் இச்செயலில் ஈடுபட்டிருப்பது நமக்குப் பாடங்கள் தருகின்றன.

தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்ந்தாரே... அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன.

பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ஒருபுறம் என்றால், ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் வருகிற செவ்வாயன்று துவங்கி வருகிற ஞாயிறு வரை நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளையொட்டி நம்பிக்கையை வளர்க்கும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளையோரையும் மறுபுறம் எண்ணி பெருமைப்படுவோம். "இளையோரே, உங்கள் நம்பிக்கை பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்” என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று மன்றாடுவோம். நாளை, திங்கள் கிழமை, இந்தியாவின் விடுதலை நாளும், அன்னை மரியாவின் விண்ணேற்பு நாளும் இணைந்து வரும் வேளையில், நாட்டில் பிளவுகளும் பிரிவுகளும் மறைந்து வளமையும், ஒற்றுமையும் வளர வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.