2011-08-13 14:00:48

சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை


ஆக.13,2011. மனித உடல் உறுப்புகள் தொடர்பான சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபடுவோருக்குப் பத்தாண்டுவரை சிறைத் தண்டனையும் ஒரு கோடி ரூபாய்வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு, லோக்சபாவில் இவ்வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், இதன்படி, சட்ட விரோத மனித உடல் உறுப்புகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும், சட்ட விரோத உடலுறுப்பு மாற்றத்தில் ஈடுபடுவோருக்கும் இனிமேல், 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா அடுத்த வாரம் ராஜ்யசபாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
தற்போது இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும், 20 இலட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது என்று குலாம் நபி ஆசாத் மேலும் கூறினார்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சம் பேருக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன. இவர்களில் 3,500 பேர் மட்டுமே மாற்றுச் சிறுநீரகத்தைப் பெறுகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.