2011-08-12 15:07:34

திருப்பீட குருக்கள் பேராயம் திருத்தலங்களின் அதிபர்களுக்குக் கடிதம்


ஆக.12,2011. திருத்தலங்கள், மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிப்பதால் அவற்றைத் தரிசிக்க வரும் பக்தர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு திருப்பீட குருக்கள் பேராயம், உலகத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza வும், அதன் செயலர் பேராயர் Celso Morga Iruzubietaம் கையெழுத்திட்டு உலகிலுள்ள அனைத்துத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கேட்டுள்ளனர்.
இறைவன், திருத்தலங்களை, பலரின் மனமாற்றத்திற்கான அசாதாரண இடங்களாகப் பயன்படுத்தியிருப்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம் என்றுரைக்கும் அக்கடிதம், திருத்தலங்கள் பலருக்கு ஆறுதலும் தேறுதலும் தருகின்ற இடங்களாகவும் அமைந்துள்ளன என்றும் கூறுகிறது.
இன்றும் பலருக்கு, இப்புனித இடங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தூண்டிவிடுவதாயும் தூய்மையான வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கும் இடங்களாயும் அமைந்துள்ளன என்றும் அக்கடிதம் கூறுகிறது.
இதனால் இவற்றைக் கண்காணிக்கும் அருட்பணியாளர்கள், ஒப்புரவு அருட்சாதனத்தைக் கேட்டல், பிற அருட்சாதனங்களையும் திருவழிபாடுகளையும் நிகழ்த்துதல், திருமறைக்கல்வி புகட்டல், திருக்கலைகள் பற்றி எடுத்துரைத்தல் போன்றவற்றிற்கு முழுமையான முக்கியத்துவம் கொடுக்குமாறு அக்கடிதம் வலியுறுத்துகிறது.
திருத்தலங்களை எப்போவாவது தரிசிப்பவர்களுக்கும் இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு திருப்பீட குருக்கள் பேராயம் உலகத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வேண்டுகோள் விடுத்துள்ளது







All the contents on this site are copyrighted ©.