2011-08-11 15:22:45

இங்கிலாந்தின் வன்முறைகளுக்குத் தீர்வு காண Pax Christi அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பல்சமய முயற்சிகள்


ஆக.11,2011. கடந்த ஒரு வாரமாக இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் நிலவி வரும் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் வகையில், லண்டன் மாநகரில் Pax Christi அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பல்சமய முயற்சிகள் இப்புதன் இரவு நிறைவுக்கு வந்தன.
இளையோர் மத்தியில் வருங்காலத்தைப் பற்றி பெருமளவு நிலவும் நிலையற்ற எண்ணங்கள் அவர்களில் பலரை இவ்வகை கலவரங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட வைக்கின்றன என்று Pax Christi அமைப்பின் பொதுச் செயலர் Pat Gaffney கூறினார்.
இன்றைய உலகின் பாதுகாப்பற்ற, மற்றும் நம்பிக்கையைக் குறைக்கும் சூழல்களிலும் நமது விசுவாசம் நமக்கு உதவியாக உள்ளது என்றும், இன்று நிலவும் இந்தப் பட்டங்கள் நீங்கி, இளையோர் மீது மீண்டும் நம்பிக்கை பிறக்க நமது விசுவாசம் துணை நிற்கும் என்றும் Columban Justice and Peace என்ற குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
பல்சமய செப வழிபாடு முடிந்ததும், அனைத்து மத உறுப்பினர்களும் புத்த மதக் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அங்கிருந்து ஏந்திய விளக்குகளுடன் Thames ஆற்றங்கரைக்கு சென்று, அந்த விளக்குகளை ஆற்றில் மிதக்க விட்டனர்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஜப்பானில் ஹீரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டுக்குப் பலியானோரையும் நினைவுகூர்ந்து இவ்விளக்குகள் ஆற்றில் விடப்பட்டன.









All the contents on this site are copyrighted ©.