2011-08-10 15:23:52

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஆக 10, 2011. ஐரோப்பா முழுவதுமே கோடைகால விடுமுறையை அனுபவித்து வரும் இவ்வேளையில் திருத்தந்தையும் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வருவது நாம் அறிந்ததே. ஒருமாத இடைவெளிக்குப்பின் இம்மாதம் தன் புதன் பொதுமறைபோதகத்தை கடந்த வாரத்தில் துவக்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரம் புனித கிளாராவின் ஜெப வாழ்வை மேற்கோள்காட்டி தன் மறைபோதகத்தை வழங்கினார்.
ஒவ்வொரு காலத்திலும் ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்வை இறைவனுக்குச் செபத்தில் அர்ப்பணித்து, இயற்கையின் அழகு நிரம்பிய இடங்களில் தங்கள் சபைகளை நிறுவியுள்ளனர். இவ்விடங்கள் இரு முக்கியக் கூறுகளை இணைத்து நிற்கின்றன. ஒருபக்கம் இயற்கையின் அழகு, மறுபக்கமோ அங்கு காணப்படும் ஆரவாரமற்ற அமைதி. சுற்றுப்புறத்தின் இந்த அமைதி, இறைவனின் குரலுக்குச் செவிமடுக்கவும் தியானிக்கவும் உதவுகின்றது என்ற திருத்தந்தை, இவ்வியாழனன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் அசிசியின் புனித கிளாரா குறித்து எடுத்துரைத்தார். ஏழைச்சகோதரிகள் எனத் தங்களை அழைத்து தூய கிளாராவும் அவர் உடன் சகோதரிகளும் அசிசியில் வாழ்ந்த இடம் இயற்கை அழகுடன் அமைதி நிறைந்ததாய் காணப்பட்டது. இத்தகைய அமைதியான துறவு இல்லங்களில் பலர் அவ்வப்போது தங்கி ஆன்மீக வளம் பெற்றுச் செல்வது உண்டு. தூய கிளாராவை இந்நாட்களில் சிறப்பான விதத்தில் நினைவு கூர்வோம். அதேவேளை, இச்செவ்வாயன்று திருச்சபையில் நினைவுகூரப்பட்ட ஐரோப்பாவின் இணைப்பாதுகாவலியான தூய எடித் ஸ்டெய்ன், இப்புதனன்று நினைவுகூரப்பட்ட தூய இலாரன்ஸ் ஆகியோரையும் நினைவில் கொள்வோம். அமைதியிலும் ஜெபத்திலும் அன்பு செய்ய நமக்குக் கற்றுத் தரும் அன்னை மரியை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம்.
மத்ரித்தின் உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் இங்கு வந்திருக்கும் இளையோருக்கு சிறப்பான விதத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அமைதி செபம் மற்றும் தியானத்தின் மூலம் நாம் இறைவன் அருகாமையில் செல்வதற்கு இந்நாட்களில் நாம் சிறப்பிக்கும் புனிதர்களின் பரிந்துரை நமக்கு உதவுவதாக. இறைவன் தன் மகிழ்வாலும் அமைதியாலும் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.