2011-08-10 15:22:24

திருத்தந்தையின் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி இசை நிகழ்ச்சி


ஆக.10,2011. Antonio Vivaldi, Johann Sebastien Bach ஆகிய இரு புகழ்பெற்ற மேற்கத்திய இசையமைப்பாளர்கள் மிக ஆழமான இறைபக்தி கொண்டவர்கள் மற்றும் அவர்களின் சமய உணர்வு அவர்களின் திருஇசைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று புகழாரம் சூட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகையில் தனது அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி இச்செவ்வாய் மாலை வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
"New Seasons" என்ற ஜெர்மானிய இசைக்குழுவினரால் நடத்தப்பட்ட இந்தக் கச்சேரியில் Vivaldi, Bach ஆகிய இருவரின் இசைப் படைப்புகள் இடம் பெற்றன.
இதன் நடத்துனர் Albrecht Mayer மற்றும் வயலின் புகழ் Arabella Steinbecher உட்பட அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்த திருத்தந்தை, Vivaldi யும், Bachம் 18ம் நூற்றாண்டின் மாபெரும் இசையின் பிரதிநிதிகள் என்றும் பாராட்டினார்.
கத்தோலிக்கக் குருவான விவால்தியின் இசையில் அவரின் ஆழமான மத உணர்வும், லூத்தரன் கிறிஸ்தவரான பாக்கின் இசையில், கடவுள் தமது படைப்பில் பதித்துள்ள நல்லுணர்வும் வெளிப்படுகின்றன என்று மேலும் கூறினார் திருத்தந்தை.









All the contents on this site are copyrighted ©.